Published : 08 Apr 2024 05:08 AM
Last Updated : 08 Apr 2024 05:08 AM

கண்ணூர் குண்டுவெடிப்பில் 4 பேர் கைது: 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை

கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த 5-ம் தேதி வீட்டின் மொட்டை மாடியில் நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தில் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

இவ்வழக்குத் தொடர்பாக இதுவரையில் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் 10 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டி ருப்பதாகவும் கேரள காவல் துறை தெரிவித்துள்ளது.

கண்ணூர் மாவட்டத்தில் பனூரில் ஆள் இல்லாத வீட்டு மொட்டை மாடியில் ஷெரீன், வினீஷ், விநோத், அஷ்வந்த் ஆகிய இளைஞர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்தது. இதில்ஷெரீன் உயிரிழந்தார். காயமடைந்த மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணி அளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம், கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வெடிகுண்டு விபத்துக்கும் ஆளும் கட்சியான சிபிஐ(எம்) கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டியது.

இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சத்தீஷன், “கம்யூனிஸ்ட் கட்சி அதன் தொண்டர்களை நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்திலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கேரளாவில் சட்ட ஒழுங்கு சீர் குலைந்து வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டை சிபிஐ(எம்)கட்சி மறுத்தது. “வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், முன்பு எங்கள் கட்சியின் தொண்டர்களாக இருந்தனர். ஆனால்,இப்போது அவர்களுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என்று அக்கட்சியின் மாநில செயலர் கோவிந்தன் தெரிவித்தார்.

இவ்வழக்கில், செபின் லால், கே அதுல், கே கே அருண், சயோஜ் உள்ளிட்ட 4 பேரை கேரள காவல் துறை சனிக்கிழமை கைது செய்தது. சரோஜ் கோயம்புத்தூருக்கு தப்பியோட முயன்ற நிலையில் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறைதெரிவித்தது.

மேலும், வெடிகுண்டு விபத் தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் வினீஷ், விநோத், அஷ்வந்த் ஆகிய மூவர் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெடிகுண்டு தயாரிப்புக்கான நோக்கம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஷெரீனின் வீட்டுக்கு பனூர் பகுதியைச் சேர்ந்த சிபிஐ(எம்) கட்சி தலைவர்கள் சுதிர் குமார் மற்றும் அசோகன் ஆகிய இருவர் நேற்று சென்றனர். அதேபோல், நேற்று நடைபெற்ற ஷெரீனின் இறுதிச்சடங்கில் கூத்து பரம்பா எம்எல்ஏ கேபி மோகன் கலந்து கொண்டார்.

இந்த வெடிகுண்டு நிகழ்வுக்கும் தங்கள் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று ஆளும் சிபிஐ(எம்) கட்சி கூறிவரும் நிலையில், அக்கட்சித் தலைவர்கள் இவ்வழக்கில் சம்பந் தப்பட்ட நபரின் வீட்டுக்குச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x