Last Updated : 08 Apr, 2018 09:21 AM

 

Published : 08 Apr 2018 09:21 AM
Last Updated : 08 Apr 2018 09:21 AM

நாட்டில் உள்ள 16 மத்திய பல்கலைக்கழகங்களில் ஒரு தமிழர் கூட துணைவேந்தராக இல்லை

நாடு முழுவதும் உள்ள 16 மத்திய பல்கலைக்கழங்களில், ஒரு தமிழர் கூட துணைவேந்தராக பதவி வகிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

நாட்டில் டெல்லி பல்கலை, ஜவகர்லால் நேரு பல்கலை, பனாரஸ் பல்கலை, அலகாபாத் பல்கலை, அலிகர் முஸ்லிம் பல்கலை உட்பட மொத்தம் 31மத்திய பல்கலைக்கழகங்கள் இருந்தன. இவை இல்லாத மாநிலங்களில், புதிதாக மத்திய பல்கலைக்கழகங்கள் தொடங்க முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, புதிதாக 16 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. இந்த பல்கலைகளுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையின் தெரிவுக்குழு பரிந்துரையால் 5 ஆண்டுக்கான துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டனர். கடைசியாக 2016-ல் 16 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் ஒருவர் கூட தமிழர் இல்லை.

இதுகுறித்து டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா மத்திய பல்கலைக்கழக ஆசிரியர் சங்க செயலாளர் பேராசிரியர் எஸ்.வீரமணி, ‘தி இந்து’விடம் கூறும்போது, “பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களை மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக அதிக அளவில் அமர்த்தப்படுவதாக புகார் உள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் திமுக இடம்பெற்றிருந்தது. இதுபோல இப்போதைய மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு 37 எம்பிக்களைக் கொண்ட அதிமுக ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் 16 மத்திய பல்கலைக்கழகங்களில், துணை வேந்தர் பதவிக்கு தகுதியுடன் விண்ணப்பித்த தமிழர்களில் ஒருவரைக் கூட அப்பதவியில் அமர்த்தாதது உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது” என்றார்.

இந்த 16 பல்கலைக்கழகங்கள் புதிதாக தொடங்கப்பட்டதும் முதன்முறையாக நியமிக்கப்பட்ட துணை வேந்தர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை. எனினும், ஐஐடி பேராசிரியர் மூர்த்திக்கு மட்டும், கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடைக்கால துணை வேந்தராக 2 வருடம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தின் திருவாரூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ் அறிந்த ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படவில்லை.

உதாரணமாக, இந்தி துறையில் தமிழர் அல்லாதவர்கள் பேராசிரியர்களாக இருப்பதால் தமிழக மாணவர்களுக்கு அதை முறையாக போதிக்க முடியாத நிலை உள்ளது.

இதன் முதல் துணைவேந்தரான பி.பி.சஞ்சய் கர்நாடாகவைச் சேர்ந்தவர். இப்போதுள்ள ஆதித்ய பிரசன்ன தாஸ், ஒடிசாவைச் சேர்ந்தவர். இவரை நியமித்த தெரிவுக் குழுவில் இருந்த ஒரு உறுப்பினர், தமிழக பல்கலைக்கழகத்துக்கு ஒரு தமிழரை துணை வேந்தராக நியமித்தால்தான் அதன் முன்னேற்றத்துக்கு உதவும்’ என்று கூறியதை மனிதவள மேம்பாட்டுத் துறை ஏற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x