Published : 06 Apr 2024 10:42 AM
Last Updated : 06 Apr 2024 10:42 AM

ஜெகன், சந்திரபாபு நாயுடு... யாருக்கு ஷர்மிளாவின் வருகையால் பாதிப்பு?

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவரான ஒய்.எஸ். ஷர்மிளா ஆந்திர அரசியலில் கால் ஊன்றி இருப்பதால் அவரது அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாதிப்பா? அல்லது தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது தான் இப்போது ஆந்திர மக்களிடையே ஏற்பட்டுள்ள கேள்வி.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த தங்கையான ஒய்.எஸ். ஷர்மிளா மற்றும் இவர்களின் தாயார் விஜயலட்சுமி ஆகியோர் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்தனர். ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் தாய், மற்றும் தங்கை ஷர்மிளா ஹைதராபாத்தில் குடியேறிய கையோடு, ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா என்கிற கட்சியையும் ஷர்மிளா தோற்றுவித்தார். அப்போது அவர் அங்கு முதல்வராக இருந்த சந்திசேகர ராவையும், அவரது ஆட்சியையும் தீவிரமாக கண்டித்தார். உண்ணாவிரதங்கள், போராட்டங்கள் செய்து சிறைக்கும் சென்றார். அதன் பின்னர், திடீரென தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பதாக அறிவித்தார்.

காங்கிரஸில் இணைவதற்கு முன்பே ஷர்மிளா, தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில், தான் போட்டியிடாமல், காங்கிரஸுக்கே தனது ஆதரவு என அறிவித்தார். அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஷர்மிளாவும் டெல்லி சென்று காங்கிரஸில் இணைந்தார். அதன் பின்னர், அவருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இங்குதான் காங்கிரஸ் தனது ராஜ தந்திரத்தை உபயோகித்தது.

ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கி, ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியில் இருந்த அனைவரையும் தனது கட்சிக்கு இழுத்த ஜெகன்மோகன் ரெட்டியை பழி வாங்கஇதுதான் சரியான சந்தர்ப்பம் என காங்கிரஸ் கருதியது. ஷர்மிளாவை அண்ணனுக்கு எதிராக திருப்பி விடுவதால், தாம் ஆந்திராவில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்று விடலாம் எனவும் காங்கிரஸ் கணக்கு போட்டது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் எனும் பழமொழிக்கெற்ப, ஷர்மிளாவை அண்ணனுக்கு எதிராக திருப்பி அனுப்பியது காங்கிரஸ். ஷர்மிளாவும் தான் பழிவாங்க ஆந்திர அரசியலை தேர்ந்தெடுத்து, கட்சி மேலிடம் கூறியபடி, ஆந்திராவுக்கு வந்தார்.

ஜெகன் மீது தீவிர விமர்சனங்களை மக்கள் முன் வைத்தார். இதனால், ஷர்மிளா மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. காங்கிரஸில் இருந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சென்றவர்களில் சிலர் தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கேவர தொடங்கி உள்ளனர். இது ஷர்மிளாவின் முதல் வெற்றியாக கருதப்படுகிறது. ஒருபுறம்பிரதமர் மோடி மறுபுறம் தனது அண்ணன் ஜெகன் என மாறி, மாறி ஷர்மிளா இருவரையும் விமர்சித்து வருகிறார். இதனால், ஆந்திர மாநில காங்கிரஸாருக்கும் ஒரு புதிய நம்பிக்கை துளிர் விட தொடங்கி உள்ளது. 2024-ல் இல்லாவிட்டாலும், அடுத்த 2029-ல் கண்டிப்பாக ஆந்திராவில் காங்கிரஸ் ஒரு மாபெரும் கட்சியாக உருவெடுக்கும் என நம்பிக்கை எழுந்துள்ளது.

ஷர்மிளா வருகையால் தெலுங்கு தேசம் கட்சியினருக்கு வேலை சுலபம் ஆகி விட்டது என்றே கூறலாம். ஏனெனில், தெலுங்கு தேசம்கூட்டணியினர் ஜெகனை விமர்சிப்பதை விட, அவரது சொந்த தங்கையான ஷர்மிளா, அண்ணன் ஜெகனை தீவிரமாக விமர்சித்து வருகிறார். இதனால், வரும் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் சிதறி, சில சதவீத வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு விழ அதிக வாய்ப்புகள் உள்ளது. தெலுங்கு தேசம் கட்சிக்கு, ஜனசேனா மற்றும் பாஜகவின் வாக்குகள் கொஞ்சம் கூட சிதறாமல் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆக, ஷர்மிளாவின் வருகை அவரது அண்ணன் ஜெகனுக்கே பாதிப்பு என்பது ஊர்ஜிதமாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x