Last Updated : 04 Apr, 2024 07:16 PM

2  

Published : 04 Apr 2024 07:16 PM
Last Updated : 04 Apr 2024 07:16 PM

பட்டியலின இளம் பெண் வேட்பாளர்... யார் இந்த சாம்பவி சவுத்ரி? | 2024 தேர்தல் கள புதுமுகம்

சாம்பவி குணால் சவுத்ரி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் பிஹாரின் சமஸ்திபூர் தொகுதியில் களம் காண்கிறார் பிஹார் அமைச்சர் (ஜேடியு) அசோக் சவுத்ரியின் மகள் சாம்பவி குணால் சவுத்ரி. 25 வயதான இவர், பட்டியலின இளம் பெண் வேட்பாளர் என்ற அடையாளத்தையும் பெற்றுள்ளார்.

சமஸ்திபூர் தொகுதியில் களம் காணும் சாம்பவி குணால் சவுத்ரிவுக்கு சீட் கிடைத்ததில் அவரது தந்தை, அமைச்சர் (ஜேடியு) அசோக் சவுத்ரியின் தலையீடும், பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் தலையீடும் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. பிஹாரில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சாம்பவி குணால் சவுத்ரி?: 25 வயதான சாம்பவி குணால் சவுத்ரி, (Shambhavi Kunal Choudhary) மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இளம் பட்டியலின பெண் வேட்பாளர் ஆவார். டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சமூகவியலில் (Sociology) முதுகலைப் பட்டம் பெற்ற அவர், தற்போது மகத் பல்கலைக்கழகத்தில் தனது பிஎச்டி படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

அவரது தந்தை அசோக் சவுத்ரி முதல்வர் நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார். காங்கிரஸைச் சேர்ந்த அவரது தாத்தா மஹ்வீர் சவுத்ரி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். சாம்பவி குணால் சவுத்ரியின் குடும்பத்தினர் மூன்றாம் தலைமுறையாக அரசியலில் களம் காண்கின்றனர்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நான் அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு பெண்ணாக இருந்தாலும், எனக்கு சிறு வயதிலிருந்தே அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. சிறுவயதில், என் தாத்தாவும் அப்பாவும் தங்களது தொகுதி மக்களுக்கு சேவை செய்வதை கண்டு நான் வியந்திருக்கிறேன். ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியின் மகளாக இருப்பது நிச்சயமாக எனக்கு பெருமைதான். ஆனால் அதுமட்டும் எனது அடையாளம் கிடையாது.

நான் நன்றாகப் படித்த பெண், மற்றவர்களை வழிநடத்தும் திறன் கொண்டவள் என்பதை உணர்கிறேன். இளைஞர்களின் தற்போதைய கோரிக்கைகள் என்ன என்பதை அறிந்திருப்பதற்கு, என்னை போன்ற இளைஞர்கள் அரசியலில் இருப்பது மிகவும் முக்கியம். நான் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பதற்கு, மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி நன்கு புரிந்திருக்க வேண்டும் என்பதே தேவை. நான் மக்களின் பிரதிநிதியாக என்றும் மக்களுக்காக இருப்பேன். என்னை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதை அவர்கள் தான் தீர்மானிப்பார்கள்.

நான் சமஸ்திபூரில் (Samastipur) பிறந்து வளர்ந்தவன் அல்ல, முதலில் என் தொகுதிக்கு சென்று மக்களின் மனநிலையை பற்றி புரிந்து கொள்ள முயற்சி செய்வேன். பொருளாதாரத்திலும் சமூகத்திலும் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவேன். நமக்கு வாக்களிக்கும் மக்கள் கடவுளைப் போன்றவர்கள் என்பதுதான் என் தந்தையிடமிருந்து நான் கற்றுக் கொண்டது.

நாம் ஒருபோதும் அவர்களை ஏமாற்றக்கூடாது. அவர்களுக்காக நாம் உழைக்க வேண்டும். எனக்கு சீட் கிடைத்ததில் எனது தந்தைக்கும், பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் எந்தவித தலையீடும் இல்லை. ஒவ்வொரு நாளும், தேர்தல் பிரச்சாரமும் எனக்கு சவாலானதாகதான் இருக்கும். ஆனால் எல்லா சவால்களையும் சமாளிக்கும் அளவுக்கு நான் பலமாக இருக்கிறேன்” என்றார்.

இத்தனை அரசியல் சிக்கலுக்கு மத்தியில் தேர்தலுக்கு முற்றிலும் புதுமுகமான, 25 வயதான சாம்பவி குணால் சவுத்ரிக்கு அவரது குடும்பத்தின் செல்வாக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முந்தைய பகுதி: பாஜகவின் ‘இணைய’ ஆளுமை... யார் இந்த தவால் படேல்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x