Last Updated : 22 Apr, 2018 09:03 AM

 

Published : 22 Apr 2018 09:03 AM
Last Updated : 22 Apr 2018 09:03 AM

ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி பயின்றவர்கள் ஆங்கில மருத்துவம் பார்க்கும் திட்டம்: இணைப்பு பயற்சி மையம் அமைக்க மத்திய அரசு முயற்சி

ஆயுர்வேதம், யுனானி மற்றும் ஹோமியோபதி பயின்றவர்கள் ஆங்கில மருத்துவமும் பார்க்க அனுமதிக்கும் மத்திய அரசின் திட்டத்தில் மாற்றம் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க மத்திய அரசு ஒரு புதிய திட்டம் வகுத்திருந்தது. இதன்படி, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய மாற்று மருத்துவப் பிரிவுகளை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை ஆங்கில மருத்துவமும் பார்க்க அனுமதிப்பது, அதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிப்பது என்று முடிவு செய்துள்ளது. இதுபோன்ற பல காரணங்களால் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதில், தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, நாடாளுமன்றத்தில் ‘தேசிய மருத்துவ ஆணையம் மசோதா 2017’ அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், எம்.பி.க்கள் நிலைக்குழுவின் ஆய்வுக்கு மசோதா பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், மாற்று மருத்துவர்கள் ஆங்கில மருத்துவம் பார்க்க அனுமதிப்பதை எம்.பி.க்கள் ஏற்கவில்லை. அதையும் மீறி இணைப்பு பயிற்சி நிறுவனங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் மருத்துவ நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக சுகாதார மையங்கள் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள் எண்ணிக்கை வரும் காலங்களிலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இல்லை. இதுதொடர்பாக நிதி ஆயோக் அதிகாரிகளுடன் எங்கள் அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது, சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில், இணைப்பு பயிற்சி பெற்ற மாற்று மருத்துவர்களை பயன்படுத்தும் மத்திய அரசின் முடிவில் மாற்றம் இல்லை என்று நிதி ஆயோக் அதிகாரிகள் கூறினர்” என்று தெரிவித்தன.

இணைப்பு பயிற்சிக்கான பாடத்திட்டங்களை இந்திராகாந்தி திறந்தவெளிப் பல்கலைக் கழகம் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, வரும் 2019-ம் ஆண்டிற்குள் மத்திய அரசு 15,000 இணைப்பு பயிற்சி மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை ஆங்கில மருத்துவர்கள் எதிர்த்து வருகின்றனர். ஆனால், எதிர்ப்புகளையும் மீறி நாடாளுமன்றத்தில் மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x