Published : 02 Apr 2024 07:18 AM
Last Updated : 02 Apr 2024 07:18 AM

மத்திய பிரதேச மாநிலம் போஜசாலை கோயில், கமால் மசூதியில் ஏஎஸ்ஐ ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

போஜசாலை கோயில், கமால் மவுலா மசூதி. (கோப்புப் படம்).

புதுடெல்லி: போஜசாலை கோயில், கமால் மவுலா மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜசாலை வளாகத்தினுள் சரஸ்வதி கோயிலும், அதன் அருகே கமால் மவுலானா மசூதியும் அமைந்துள்ளன. இந்த போஜசாலை கோயில், கமால் மவுலா மசூதியில் தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆய்வுக்கு மத்தியபிரதேச உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மவுலானா கமாலுதீன்நலச் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பி.கே. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் போஜசாலை கோயில், கமால் மவுலா மசூதியில் தொல்லியல் துறையின் ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும், தொல்லியல் துறை ஆய்வு அறிக்கை சமர்ப்பித்த பிறகு உச்ச நீதிமன்ற அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.

மேலும், போஜசாலை கோயில் வளாகத்தில் தொல்லியல் ஆய்வு நடைபெறும் இடங்களில் அதன் தன்மையை மாற்றும் வகையில் எந்த ஆய்வும் மேற்கொள்ளக் கூடாது என்று தொல்லியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் அமைந்துள்ள பழங்கால போஜசாலை வளாகத்தினுள் சரஸ்வதி கோயிலும், அதன் அருகே கமால் மவுலா மசூதியும் எழிலுற அமைந்துள்ளன. கி.பி. 1034-ம்ஆண்டு போஜ் மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டதாகவும், பிற்காலத்தில் இப்பகுதியை முற்றுகையிட்ட முகலாய அரசர்கள் அங்கு மசூதி கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, 2003-ம் ஆண்டுமேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, ஒவ்வொரு செவ்வாயன்றும் சூரியோதயம் தொடங்கி அஸ்தமனம் வரை போஜசாலை வளாக கோயிலில் இந்துக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். போஜசாலை வளாக மசூதியில் ஒவ்வொரு வெள்ளியன்றும் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், வாராணசி கியான்வாபி மசூதி தீர்ப்பை தொடர்ந்து போஜசாலை வளாகத்தில் வழிபடும் உரிமைக்காக இரு தரப்பினர் இடையே சர்ச்சை வெடித்ததால், அப்பகுதியில் அறிவியல்பூர்வ தொல்லியல் ஆய்வு நடத்த இந்துக்கள் தரப்பில் ஆசிஷ் கோயல் என்பவர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொல்லியல் துறையினர் 6 வாரங்களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x