Last Updated : 02 Apr, 2024 07:31 AM

 

Published : 02 Apr 2024 07:31 AM
Last Updated : 02 Apr 2024 07:31 AM

கர்நாடகாவில் காங்கிரஸை சமாளிக்க 3 முன்னாள் முதல்வர்களை களமிறக்கிய பாஜக‌

கோப்புப்படம்

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தனித்து களமிறங்கியுள்ள காங்கிரஸ் தற்போதைய அமைச்சர்களின் பிள்ளைகள், கட்சி தலைவர்களின் குடும்பத்தினரையே பெரும்பாலும் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவர்களை சமாளிக்க பாஜக கூட்டணியும் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் துணை முதல்வர், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர், முன்னாள் அமைச்சர்களை களமிறக்கியுள்ளது.

முன்னாள் பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஷிகோன் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். அவரை பாஜக மேலிடம் ஹாவேரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கியுள்ளது. காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு பாஜக தலைமை பெலகாவி தொகுதியில் வாய்ப்பு அளித்திருக்கிறது. ஜெகதீஷ் ஷெட்டர் லிங்காயத்து சமூக‌ வாக்காளர்களை நம்பி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸில் தற்போதைய மகளிர் நலத்துறை அமைச்சர் லட்சுமிஹெம்பல்கரின் மகன் மிருனாள் ஹெம்பல்கர் களமிறக்கப்பட்டுள்ளார்.

மண்டியா தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் மஜத முதல்வர் குமாரசாமி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அங்கு போட்டியிட விரும்பிய தற்போதைய எம்பியும் நடிகையுமான சுமலதாவை சந்தித்து குமாரசாமி ஆதரவு கேட்டுள்ளார். ஒக்கலிகா சமூக வாக்காளர்களை நம்பி களமிறங்கியுள்ள அவரை வீழ்த்த, அதே சமூகத்தை சேர்ந்த வெங்கட்ராம கவுடாவை காங்கிரஸ் களமிறக்கி உள்ளது.

சித்ரதுர்கா (தனி) தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

மூன்று முன்னாள் முதல்வர்களுக்கும் ஒரு துணை முதல்வருக்கும் பாஜக மேலிடம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. அதேவேளையில் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா, ஷிமோகா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பாவுக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு கொடுக்கவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்துள்ள ஈஸ்வரப்பா அந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸில் முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி சிக்கப்பள்ளாப்பூரில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். வாய்ப்பு வழங்காததால் வீரப்ப மொய்லியும் அதிருப்தி அடைந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x