Published : 29 Mar 2024 06:37 AM
Last Updated : 29 Mar 2024 06:37 AM

இந்திய, சீன எல்லைப் பகுதியில் முழுமையாக ராணுவத்தை விலக்கிக் கொள்வது பற்றி இருதரப்பு அதிகாரிகள் ஆலோசனை

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: அசல் எல்லைக் கோட்டுப் பகுதியில் ராணுவத்தை முழுவதுமாக விலக்கிக் கொள்வது தொடர்பாக இந்திய - சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி கடும் மோதல் நடைபெற்றது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். 1962-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட போருக்குப் பின் இந்த மோதல் நடந்ததால், இந்தியா–சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து எல்லை பிரச்சினைகளை பேசித் தீர்க்க இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை கடந்த 2020-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையால் கல்வான், பாங்காங் ஏரி வடக்கு மற்றும் தென்கரை பகுதிகள், ரோந்து முனை 15 மற்றும் 17ஏ, கோக்ரா- ஹாட் ஸ்பிரிங் பகுதி ஆகிய 5 இடங்களில் இருந்து இரு நாட்டு படையினரும் பின்வாங்கினர்.

இந்நிலையில் லடாக் அருகிலுள்ள அசல் எல்லைக் கோட்டுப் பகுதியில் ராணுவத்தை முழுவதுமாக விலக்கிக் கொள்வது தொடர்பாக இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலர் (கிழக்கு ஆசியா) தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் குழு இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

அதேபோல் சீன வெளியுறவுத்துறை தலைமை இயக்குநர் (எல்லை மற்றும் கடல்சார் துறை) தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. இந்தக் கூட்டம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

29-வது கூட்டம்: எல்லைப் பகுதியில் ராணுவத்தை விலக்கிக் கொள்வது தொடர்பாக இந்திய, சீன உயர்அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற 29-வது கூட்டமாக இது அமைந்தது.

இந்தக் கூட்டத்தின்போது எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இரு நாட்டு ராணுவ வீரர்களையும் முழுவதுமாக விலக்கிக் கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும், லடாக் எல்லையில் முழுமையாக ராணுவத்தை விலக்கிக் கொள்வது எப்படி என்றும், இந்தியா, சீனா இடையே உள்ள பிரச்சினைகளை படிப்படியாக பேசித் தீர்த்துக் கொள்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட 2 நாட்டு ஒப்பந்தங்களின்படி இரு நாட்டு எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x