Last Updated : 17 Feb, 2018 12:36 PM

 

Published : 17 Feb 2018 12:36 PM
Last Updated : 17 Feb 2018 12:36 PM

குஜராத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளித்த தலித் விவசாயி உயிரிழப்பு

குஜராத்தில் நில ஒதுக்கீடு கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பானுபாய் வங்கர் (வயது 60) பரிதாபமாக உயிரிழந்தார்.

குஜராத் மாநிலம் பத்தன் மாவட்டத்தைச் சேர்த்த தலித் சமூகத்தைச் சேர்ந்த நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிலம் வழங்குவதாக அறிவித்தது. அதன்படி ரெம்பன் மற்றும் ராம்பாய் கிராமங்களைச் சேர்ந்த சில தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிலம் ஒதுககீடு செய்யப்பட்டது.

ஆனால் அறிவிப்பு வெளியான போதிலும், அதனை சட்டபூர்வமாக அவர்கள் பெயரில் பத்திரம் பதிவு செய்து வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த தலித் சமூக போராளி பானுபாய் வங்கர் என்பவர், மற்றவர்களை ஒருங்கிணைத்து இதற்கான முயற்சியை மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பலமுறை சென்று மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எம்எல்ஏ, அமைச்சர்கள் என பலரும் வாக்குறுதி மட்டுமே அளித்துள்ளனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறவில்லை. இதையடுத்து முதல்வர் விஜய் ரூபானிக்கு, வெங்கர் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அந்த கடிதத்தை முதல்வர் ரூபானி அனுப்பியுள்ளார்.

ஆனால் நாட்கள் நகர்ந்தாலும், தலித் மக்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக வங்கர் அறிவித்தார். அதன்படி பிப்ரவரி 15ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்யை ஊற்றிக்கொண்டு வெங்கர் தீக்குளித்தார்.

போலீஸார் விரைந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மற்ற தலித் விவசாயிகளையும் கைது செய்து பின்னர் விடுவித்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வங்கர் மேல் சிகிச்சைக்காக அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம், தலித் சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தலித் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கூறியதாவது:

‘‘குஜராத் பாஜக அரசு தலித் மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறது. ஏழை மக்களின் குரலை கேட்க இந்த அரசுக்கு நேரமில்லை. அமைச்சர்களும், முதல்வரும் சாதாரண மக்களை புறக்கணிக்கின்றனர். தலித் மக்கள் தீக்குளிப்பு போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம். இந்த அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வெற்ற பெற வேண்டும். அனைத்து மக்களையும் ஒருங்கிணைந்து குஜராத் அரசுக்கு எதிராக பேராட்டம் நடத்த தயாராக வேண்டும்’’ எனக்கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x