Last Updated : 17 Feb, 2018 07:01 PM

 

Published : 17 Feb 2018 07:01 PM
Last Updated : 17 Feb 2018 07:01 PM

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு

 

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் தெரியும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி ரூ.11,400 கோடி மோசடி செய்ததை சுட்டிக்காட்டிய கபில் சிபல் டெல்லியில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:

''நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் தெரியும்.

பிரதமர் மோடி ஏன் தன்னுடன் டாவோஸ் பொருளாதார மாநாட்டுக்கு உடன் வந்த விஐபிகளின் பெயரை வெளியிட மறுக்கிறார்?. இதுதான் இந்தியாவை எளிதாக தொழில் செய்யும் நாடாக மாற்றும் பணியா?.

பிரதமர் மோடியுடன் சில கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர்களும், தனி மனிதர்களும் பயணித்துள்ளனர். நான் பிரதமர் மோடியிடம் கேட்கிறேன், பிரதமராக மோடி வந்தபின், எத்தனை கோடி சொத்துகளை நிரவ் மோடி வாங்கி இருப்பார்? எத்தனை கோடி கடன் பெற்று இருப்பார்?

நிரவ் மோடி வாங்கிய கடனைக் காட்டிலும், அவரிடம் இருக்கும் சொத்துகளின் மதிப்பு குறைவுதான். பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி குறித்து பிரதமர் மோடி உத்தரவிடத் தயாராக இருக்கிறாரா?

அரசியல்வாதிகளுடன், அதிகாரிகளுடனும் சேர்ந்து கொண்டு முதலாளிகள் கொள்ளையடிக்கும் விஷயத்தை பாஜக ஒரு நிறுவனம் போல் நடத்துகிறது. அரசின் பணத்தில் சொத்துகள் வாங்கும் முதலாளிகள், கடனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், நாட்டைவிட்டு ஓடுகிறார்கள்.

எங்கள் ஆட்சியில் நடந்த ஊழல் குறித்தும் பேச பாஜகவுக்கு தகுதியில்லை. நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்துக்கு பாஜக கொண்டு வந்து விட்டது. தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு போன்றவை மோசமான நிலைக்கு சென்றுவிட்டன.

மிகப் பெரிய வங்கி மோசடிகள் நடந்தபோது, பிரதமர் அலுவலகம் என்ன செய்து கொண்டு இருந்தது? நாடு கொள்ளையடிக்கப்படுவது பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சகத்துக்கும் தெரிந்திருந்தும் பார்வை அற்றவர்களாக மாறிவிட்டார்கள்.

கடந்த ஆண்டில் மட்டும் எல்ஓயு எனப்படும் வங்கி உத்தரவாத கடிதங்கள் கொடுத்த வகையில் சிபிஐ 151 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அந்த தொகையை திரும்பப் பெற்று இருக்கிறார்களா?. இது குறித்து இன்னும் பிரதமர் மோடியும், நிதிஅமைச்சர் அருண் ஜேட்லியும் ஏன் வாய்திறக்க மறுக்கிறார்கள்?.

வங்கியில் கடன் பெற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்திய பொருளாதாரத்தின் மீது யாருக்கு நம்பிக்கை வரும். மக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். நீங்கள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டீர்கள். விரைவில் மக்கள் நாட்டின் மீதான நம்பிக்கையையும் இழந்துவிடுவார்கள்.

நாட்டில் இப்படிப்பட்ட பிரதமர் தூங்கிக்கொண்டு இருந்தால் நிரவ் மோடி போன்ற திருடர்கள் தப்பிக்கத்தான் செய்வார்கள்.''

இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x