Published : 10 Feb 2018 07:41 AM
Last Updated : 10 Feb 2018 07:41 AM

மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

மத்திய அரசின் சாதனைத் திட்டங்களை பாஜக எம்பி.க்கள் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளைச் சேகரிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு எம்.பி.க்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் கூறியதாக பாஜக எம்.பி.க்கள் கூறியதாவது: இந்த முறை விவசாயிகள், ஏழை மக்களின் நலனுக்கு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 10 கோடி குடும்பங்களுக்காக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளோம். விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக உயர பல்வேறு திட்டங்களை பட்ஜெட்டில் அறிமுகம் செய்துள்ளோம்.

இதுபோன்று பல நல்ல திட்டங்கள் குறித்து மக்களிடையே பாஜக எம்.பி.க்கள் எடுத்துக்கூறி அதை பிரபலப்படுத்தவேண்டும். இதன்மூலம் வரவிருக்கும் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை நமது கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார் என்று பாஜக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

அமித் ஷா

பாஜக தலைவர் அமித் ஷா பேசும்போது, “பாஜக உறுப்பினர்கள் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜனநாயகமற்ற அரசியலை நடத்தி வருகிறார். பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசியபோது ராகுல் காந்தி குறுக்கிட்டுப் பேசியது சரியல்ல. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் பேசும்போது எதிர்க்கட்சிகள் இப்படி அமளியில் ஈடுபட்டதில்லை. 2004 முதல் 2014 வரை பிரதமராக மன்மோகன் இருந்தார். அந்த காலத்தில் பிரதமர் உரை நிகழ்த்தியபோது இதுபோன்று எதிர்க்கட்சிகள் நடந்துகொண்டதே இல்லை” என்றார்.

மத்திய அமைச்சர் அனந்த்குமார் கூறும்போது, “பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களிடையே பிரபலமடையச் செய்ய பூத் கமிட்டிகளை எம்.பி.க்கள் ஏற்படுத்தி அவ்வப்போது கூட்டங்கள் நடத்த பிரதமர் அறிவுறுத்தினார். மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை பல்வேறு இடங்களில் நடத்தி திட்டங்களை பிரபலப்படுத்தவேண்டும்.

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பிரதமர் மோடி கூட்டத்தில் எடுத்துரைத்தார். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெறும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இருக்கவேண்டும். இதற்காக தொகுதிதோறும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது பணியாற்ற வேண்டும்’’ என்று தெரிவித்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x