Last Updated : 21 Feb, 2018 02:02 PM

 

Published : 21 Feb 2018 02:02 PM
Last Updated : 21 Feb 2018 02:02 PM

இந்து தீவிரவாத அமைப்புகளை மத்திய அரசு ஊக்குவிக்கிறது; சிறுபான்மையினர் பாதுகாப்பின்றி உணர்கின்றனர்: எழுத்தாளர் ராமனுன்னி வருத்தம்

இந்து தீவிரவாத அமைப்புகளை மத்திய அரசு மறைமுகமாக ஊக்குவிப்பதால் சிறுபான்மையினர் பாதுகாப்பற்று உணர்வதாக சாகித்ய அகடமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் கே.பி. ராமனுன்னி கூறியுள்ளார்.

பிரபல மலையாள எழுத்தாளர் ராமனுன்னி எழுதிய ‘தெய்வத்திண்டே புஸ்தகம்’ (தெய்வத்தின் புத்தகம்) என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. மத வன்முறை மற்றும் சகிப்பின்மை குறித்து இந்த நூலில் விரிவாக விவரித்துள்ளார்.

சாகித்ய அகடமி விருது தொகையை, டெல்லியில் மத வன்முறையாளர்களால் கொல்லப்பட்ட 16 வயதுச் சிறுவன் ஜுனைத் கானின் குடும்பத்துக்கு ராமனுன்னி வழங்கியுள்ளார். இதன் மூலம் மீண்டும் செய்திகளில் வலம் வரும் ராமனுன்னி அளித்துள்ள பேட்டி:

மதவெறி என்பது புற்றுநோயைப் போன்றது. ஒருமுறை உருவாகிவிட்டால் அதனை குணப்படுத்துவது சற்று கடினம். மத்திய அரசு பதவியேற்ற பிறகு மதமோதல்கள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது வெட்கக்கேடானது. பெரும்பான்மையான இந்துக்களின் முஸ்லிம்கள் மீதான மத சகிப்பின்மையால் மோதல்கள் அதிகரிக்கின்றன. இந்த போக்கு மாற வேண்டும்.

முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக ஜூனைத் கான் கொல்லப்பட்டுள்ளார். இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே சாகித்ய அகாடமி கொடுத்த பணத்தை அவரது குடும்பத்திற்கு அளித்து விட்டேன்.

மதச்சார்பின்மை மற்றும் சகிப்புத்தன்மை பற்றி நான் எழுதி வருகிறேன். இதற்காக சிலர் என்னிடம் கோபித்துக் கொள்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி கவலைப்படவில்லை. சமூகத்தில் மதமோதல்கள் முடிவுக்கு வர சகிப்புத் தன்மை உருவாக வேண்டும் என்பதல் உறுதியாக இருக்கிறேன்.

இவ்வாறு ராமனுன்னி கூறியுள்ளார்.

முன்னதாக, முஸ்லிமாக மாறாவிட்டால், கை, கால்கள் துண்டிக்கப்படும் என ராமனுன்னிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x