Published : 02 Feb 2018 09:28 AM
Last Updated : 02 Feb 2018 09:28 AM

பட்ஜெட் 2018: விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வில்லை: காங்கிரஸ் கருத்து

விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்க்கும் விஷயத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தோல்வியடைந்து விட்டார் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

பட்ஜெட் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி டெல்லியில் நேற்று கூறியதாவது:

பட்ஜெட்டில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் விவசாயிகளுக்கு என்ன தேவையோ, அதைக் கொடுப்பதில் மத்திய அரசு அரசு தோல்வியடைந்துவிட்டது. விவசாயிகளின் தேவையை நிறைவேற்றுவதில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தோல்வியடைந்து விட்டார்.

விவசாயிகளுக்கு உதட்டுச் சாயம் பூசும் வேலையில் மத்திய நிதி அமைச்சர் ஜேட்லி இறங்கியுள்ளார். விவசாயத் துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறை கள் பட்ஜெட்டில் இல்லை என்றார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறும்போது, “மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நிதி ஒருங்கிணைப்பு சோதனையில் தோல்வி அடைந்துவிட்டார். இந்தத் தோல்வியால் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருக்கும். மொத்தத்தில் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்” என்றார்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறும்போது, “விவசாயிகள் பிரச்சினைக்கு பட்ஜெட்டில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அது போதாது. விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு சில முயற்சிகளை செய்துள்ளது. ஆனால் இதனால் விவசாயிகள் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்று நான் ஆணித்தரமாக சொல்வேன். அவர்கள் அறிவித்த அறிவிப்புகள் போதுமான அளவில் இல்லை. நாங்கள் எவ்வளவோ எதிர்பார்த்தோம். ஆனால் விவசாயிகள் இந்தப் பட்ஜெட்டைப் பார்த்து ஏமாற்றம்தான் கொள்வர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x