Last Updated : 13 Feb, 2018 10:09 AM

 

Published : 13 Feb 2018 10:09 AM
Last Updated : 13 Feb 2018 10:09 AM

சரத்பவார் கட்சியுடன் மீண்டும்காங்கிரஸ் கூட்டணி பேச்சு

சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி பதவியேற்றதை எதிர்த்து அக்கட்சியை விட்டு மூத்த தலைவர் பி.ஏ.சங்மாவுடன் வெளியேறியவர் சரத்பவார். பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கி மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய இடம் வகித்து வருகிறார். இவரது கட்சி, மத்தியில் 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருந்தது. மகராஷ்டிராவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பவார், பாஜகவுடன் கூட்டணிப் பேச்சை தொடங்கினார். இதனால் பவாரை காங்கிரஸ் தனது கூட்டணியில் இருந்து விலக்கியது.

தற்போது மத்தியில் அரசியல் சூழல் மாறி வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சி கள் ஒன்றுகூட முயன்று வருகின்றன. இதை முன்னின்று செயல்படுத்தும் முயற்சியில் சரத்பவார் இறங்கியுள்ளார். இதற்காக அவர் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இத்துடன் காங்கிரஸுடன் தனது கட்சி கூட்டணி வைக்கவும் பேசி வருகிறார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் தேசிய நிர்வாகிகள் கூறும்போது, “மராட்டியர்கள் அதிகம் வாழும் மகாராஷ்டிரா வில் முதல்வர் பதவிக்கு தங்கள் சமூகத்தினர் வருவதையே விரும்புகின்றனர். இதனால் எங்களுடன் கூட்டணி பேசும் சரத்பவாருடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. அவருடன் ராகுல் சில தினங்களில் பேசவுள்ளார். அதன்பிறகு கூட்டணிக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இதேபோன்று மற்ற கட்சிகளுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறும்” என்று தெரிவித்தனர்.

மகாராஷ்டிராவில் விவசாயிகளின் முக்கியத் தலைவராக இருக்கும் ராஜு சேத்தியின் ‘ஸ்வபிமானி சேக்தாரி சங்கதா’ உடனும் இவ்விரு கட்சிகளும் கூட்டணிப் பேச்சு நடத்தி வருகின்றன. மாநிலங்களவை உறுப்பினரான ராஜு சேத்தி கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டார். தற்போது இவரது கட்சி எம்எல்ஏக்கள் ராஜுவை விட்டுப் பிரிந்து பாஜகவுடன் சேர்ந்து விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x