

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றம் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்: “திமுக ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகளில் நிதியமைச்சராக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். அவரை நான் ஐ.டி. துறைக்கு மாற்றினேன். அவரை நான் மாற்றியதற்கு காரணம், ஐ.டி. துறையிலேயும், நிதித்துறை போல மாற்றங்கள் தேவைப்பட்டது. அவருடைய தலைமையில் தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும், தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும்.
நான் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாக செயல்படுத்துகிறார் என்பதற்கு இந்த மாநாடே எடுத்துகாட்டாய் அமைந்திருக்கிறது” என்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடத்தப்படும் “Umagine TN 2024” தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பேசும்போது, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநாட்டைத் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்வின்போது, அனைத்து மாநகராட்சிகளிலும் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பின்படி, முதற்கட்டமாக சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களான பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கடற்கரை ஆகிய முக்கிய 500 இடங்களில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தெலங்கானா எம்எல்ஏ லாஸ்யா நந்திதா கார் விபத்தில் மரணம்: தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் செகந்திராபாத் கன்டோன்மென்ட் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா வெள்ளிக்கிழமை காலை ஹைதராபாத்தில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 36.
அந்தக் காரை ஓட்டிய அவரது உதவியாளர் படுகாயம் அடைந்தார். கார் சுமார் 130 முதல் 150 கி.மீ வேகத்தில் அலட்சியமாக ஓட்டியதும், கார் சீட் பெல்ட்டை எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா அணியாததும் அவர் மரணத்திற்கு காரணம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
‘அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை’: தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என கண்காணிக்க அடிக்கடி சோதனைகள் நடத்த வேண்டும். தொடர் குற்றத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கான உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதால், உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழக மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு, தமிழக மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று கருதாமல் பாராமுகமாகவே செயல்பட்டு வருகிறது” என்று தமிழக மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே, மத்திய அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோதப் போக்கை கண்டித்து பிப்.27-ல் மனித சங்கிலி போராட்டமும், பிப். 28 -ல் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அதேபோல், “கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவை தமிழக மீனவர்கள் புறக்கணித்து இருப்பதையும், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதையும் மத்திய பாஜக அரசு அலட்சியப்படுத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியதாகும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். அவர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்தினார். அதன்படி, திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 10 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “விருப்பு வெறுப்பின்றி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடு, குளறுபடிகளை களைய வேண்டும்” என தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “வாக்காளரின் வாக்கு நேரடியாக கன்ட்ரோல் யூனிட்டுக்குச் செல்வதுதான் நம்பகத்தன்மையை உருவாக்கும். இடையில் விவிபேட் கருவியை வைப்பதும், அதில் நூறு சதவீதம் எண்ணிக்கையைப் பார்க்க முடியாது என்று கூறுவது மிகப்பெரிய சந்தேகத்தை உருவாக்குகிறது” என்று கூறியுள்ளார்.
‘ரெய்டு’க்குப் பின் பாஜகவுக்கு ‘நன்கொடை’ - விசாரணை கோரும் காங்.,: பாரதிய ஜனதா கட்சிக்கு மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைக்குள்ளான கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய அரசியல் நன்கொடைகள் குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் அமைப்புச் செயலர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார்.
தனது கடிதத்தில் அவர், "பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் விசாரணை அமைப்புகளால் எடுக்கப்பட்ட நவடிக்கைகள் தவறானது என்று நாங்கள் குற்றம்சாட்டவில்லை. ஆனால் அமலாக்கத் துறையின் விசாரணை வழக்குகள் இருக்கும் நிறுவனங்கள் ஏன் ஆளுங்கட்சியான பாஜகவுக்கு நன்கொடை வழங்க வேண்டும். அமலாக்கத் துறையின் விசாரணைக்குப் பின்னர் அந்த நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை வழங்கியது தற்செயல் நிகழ்வு மட்டும்தானா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படுமா?: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக முடிவு செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வாரணாசி சாலைகளில் மது அருந்திய மக்கள் வீழ்ந்து கிடப்பதைப் பார்த்தேன் என்று ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “மதி இழந்தவர் என் காசியின் குழந்தைகளை குடிகாரர்கள் என்று அழைக்கிறார்” என்று சாடியுள்ளார்.
கருப்பு தினம் கடைபிடித்த விவசாயிகள் சங்கங்கள்: ஹரியாணா - டெல்லி மாநிலங்களை ஒட்டிய ஷம்பு எல்லையில் நடந்த போராட்டத்தின் போது உயிரிழந்த பஞ்சாப் விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்துக்கு அம்மாநில முதல்வர் பகவந்த் மான் ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளதுள்ளார். இந்நிலையில், இளம் விவசாயி மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்றைய தினத்தை கருப்பு தினமாக விவசாயிகள் சங்கங்கள் கடைபிடித்தன.
‘போர் பகுதிகளில் இருந்து விலகி இருங்கள்’: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் போர் நடக்கும் இடங்களில் இருந்து விலகியே இருக்கும்படி வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாக பணிபுரியும் இந்தியர்களை முன்கூட்டியே விடுவித்து அனுப்புவது குறித்து ரஷ்யாவுடன் இந்தியா பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளது.