Published : 23 Feb 2024 05:15 PM
Last Updated : 23 Feb 2024 05:15 PM

‘போர் பகுதிகளில் இருந்து விலகி இருங்கள்’ - உக்ரைன் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுரை

உக்ரைன் போர் | கோப்புப்படம்

புதுடெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் போர் நடக்கும் இடங்களில் இருந்து விலகியே இருக்கும்படி வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாக பணிபுரியும் இந்தியர்களை முன்கூட்டியே விடுவித்து அனுப்புவது குறித்து ரஷ்யாவுடன் இந்தியா பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், “ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாக பணி புரிவதற்காக இந்தியர்கள் சிலர் ஒப்பந்தம் போட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அவர்களை முன்கூட்டியே பணியில் இருந்து விடுவித்து அனுப்புவது தொடர்பாக இந்திய தூதரகம் சம்பந்தப்பட்ட ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறது. இந்திய குடிமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடனும், போர் பகுதிகளில் இருந்து விலகியே இருக்கும்படி அறிவுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த வாரத்தின் தொடக்கத்தில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.,யுமான அசாதுதீன் ஒவைசி, ரஷ்ய ராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தப்பட்டு, உக்ரைனுக்கு எதிராக போரிட நிர்ப்பந்திக்கப்படும் மூன்று இந்தியர்களை காப்பாற்றும்படி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை வலியுறுத்தியிருந்தார்.

மூன்று இந்தியர்கள் முகவர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு ரஷ்யாவில் ராணுவத்தில் உதவியாளர்களாக பணிபுரிய அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஒருவரின் குடும்பம் ஒவைசியை அணுகியதால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டால் விருப்பத்தின் பேரிலோ அல்லது கட்டாயத்தினாலோ ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து இந்தியர்கள் போராடுவது இதுவே முதல் நிகழ்வாக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x