அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிக கட்டண வசூல் தொடர்பாக அடிக்கடி சோதனைகள் நடத்திட வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் அரசாணையை அமல்படுத்த அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும், எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அபராதம் மட்டும் விதிக்கப்படுகிறது. இதனால், தனியார் பேருந்து நிறுவனங்கள் தொடர்ந்து, அதிக கட்டணம் வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபடுவதோடு, பேருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மேலும், சோதனையை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கெனவே, பல வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெறும் அபராதம் மட்டும் விதிப்பதால் தீர்வு ஏற்படப் போவதில்லை. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என கண்காணிக்க அடிக்கடி சோதனைகள் நடத்த வேண்டும். தொடர் குற்றத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கான உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதால், உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in