Published : 23 Feb 2024 09:54 AM
Last Updated : 23 Feb 2024 09:54 AM

உ.பி.யில் 17 தொகுதிகளை ஏற்றது காங்கிரஸ்: ம.பி.யில் சமாஜ்வாதிக்கு 1 ‘சீட்’ ஒதுக்கீடு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் கடந்த 2023 ஜூலையில் இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக் தளம்கட்சிகள் அண்மையில் விலகின. இரு கட்சிகளும் பாஜக கூட்டணியில் இணைந்திருப்பது இண்டியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்குவங்கத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முழுமையாக தோல்வி அடைந்திருக்கிறது. அந்த மாநிலத்தின் 42 மக்களவைத் தொகுதிகளிலும் திரிணமூல் தனித்துப் போட்டியிடும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இண்டியா கூட்டணியை சேர்ந்த தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிகள் காஷ்மீரில் தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளன. இந்த சூழலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ் வாதி, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக நீடித்து வந்தது.

முதலில் காங்கிரஸுக்கு 11 தொகுதிகளை சமாஜ்வாதி ஒதுக்கியது. இதன்பிறகு 17 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு குறைவு என்பதால் காங்கிரஸ் கடும் ஆட்சேபத்தை பதிவு செய்தது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கி ரஸ் கூட்டணி உடையும் என்று தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் நேரடியாக தொலை பேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது காங்கிரஸ் கோரிய சில தொகுதிகளை வழங்க அகிலேஷ் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து உத்தர பிரதேச மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி 63 தொகுதிகளிலும் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி அமேதி, ரேபரேலி, பிரயாக்ராஜ், வாராணசி, மகராஜ்கன்ஜ், தேவரியா, பான்ஸ்கான், சீதாபூர், அம்ரோகா, புலந்தசகர், காஜியாபாத், கான்பூர், ஜான்சி, பாராபங்கி, பத்தேப்பூர் சிக்ரி, சகாரன்பூர், மதுரா ஆகிய 17 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.

மீதமுள்ள 63 தொகுதிகளில் சமாஜ்வாதி போட்டியிடும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது உத்தர பிரதேசத்தில் பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டால் மட்டுமே ராகுலின் யாத்திரையில் பங்கேற்பேன் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்திருந்தார்.

தற்போது இரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டிருப்பதால் வரும் 24 அல்லது 25-ம் தேதி ராகுல் காந்தியோடு இணைந்து அகிலேஷ் யாதவ் பிரச்சாரம் செய்வார் என்று சமாஜ்வாதி மாநில தலைவர் நரேஷ் உத்தம் படேல் தெரிவித்துள்ளார். சமாஜ்வாதி சார்பில் இதுவரை 31 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பாஜக மூத்த தலைவர் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார்.

கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால் தற்போது அவர் எம்பியாக நீடிக்கிறார். வரும் தேர்தலில் இரு தொகுதிகளில் ராகுல் போட்டியிடுவாரா அல்லது ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவாரா என்பது தெரியவில்லை. ஒருவேளை ரேபரேலியில் அவர் போட்டியிட்டால், கடும் போட்டியை சந்திக்க நேரிடும்.

அந்த தொகுதியில் பாஜக வலுவாக இருப்பது காங்கிரஸுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். ம.பி.யில் சமாஜ்வாதிக்கு ஒரு தொகுதி மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸுக்கு 66 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது சமாஜ்வாதி கட்சியை காங்கிரஸ் முழுமையாகப் புறக்கணித்தது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் சமாஜ்வாதி 69 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவியது.

இந்த சூழலில் மத்திய பிரதேச மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி இடையே உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. மொத்தமுள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் சமாஜ்வாதிக்கு கஜுராஹோ தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதர 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x