Published : 23 Feb 2024 06:06 AM
Last Updated : 23 Feb 2024 06:06 AM

பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று முடிவு

கோப்புப்படம்

சண்டிகர்: பஞ்சாப்-ஹரியாணா எல்லை நிலவரம் குறித்து விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று மாலை முடிவை அறிவிக்கின்றன.

சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துதல், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்-ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வுகாணப்படாததால், ஷம்பு எல்லையில் இருந்து தடைகளை தாண்டி விவசாயிகள் டெல்லி நோக்கி செல்ல நேற்று முன்தினம் முயன்றனர். அவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ரப்பர் குண்டுகள் மூலம் போலீஸார் சுட்டனர்.

விவசாயிகளும் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 160 விவசாயிகள், 12 போலீஸார் காயம் அடைந்தனர். தலையில் குண்டு பாய்ந்து காயம் அடைந்த பஞ்சாப் பதிண்டா மாவட்டம் பலோக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்கரன் சிங் (21) உயிரிழந்தார்.

கொலை வழக்கு: இச்சம்பவத்தையடுத்து டெல்லிநோக்கி செல்லும் பேரணியை 2 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்தனர். அடுத்த கட்டநடவடிக்கை குறித்த பேச்சுவார்த்தையில் விவசாய சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.

டிராக்டர் பேரணி: கடந்த 2020-21-ம் ஆண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அமைப்பு ஷம்பு எல்லை நிலவரம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த எஸ்கேஎம் தலைவர்கள் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் எஸ்கேஎம் சார்பில் வரும் 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகளின் தலைவர் ராகேஷ் டிகைத் அறிவித்துள்ளார்.

விவசாயிகள் அமைப்பு தலைவர் சர்வன் சிங் பாந்தர் கூறுகையில், ‘‘ அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வெள்ளிக்கிழமை மாலை முடிவு செய்யப்படும். சுப்கரன் சிங் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஹரியாணாவில் இருந்துநுழைந்த துணை ராணுவப்படையினர் பஞ்சாப்பில் 25 முதல் 30 டிராக்டர்களை சேதப்படுத்தினர். அவர்கள் மீது பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்: கத்தார் தலைமையிலான ஹரியாணா அரசு அனைத்து விஷயங்களிலும் தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் புபிந்தர் சிங் ஹூடா சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் ஹரியாணா சட்டப்பேரவையில் பாஜக-ஜேஜேபி (ஜன்நாயக் ஜனதா கட்சி) கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நேற்று கொண்டு வந்தது. இதை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.

3 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக-ஜேஜேபி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. 90 உறுப்பினர்கள் கொண்டசட்டப் பேரவையில், பாஜக.வுக்கு 41, ஜேஜேபி கட்சிக்கு 10 எம்எல்.ஏ.க்கள் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x