Published : 22 Feb 2024 06:36 AM
Last Updated : 22 Feb 2024 06:36 AM
புதுடெல்லி: திருமணம் செய்ததால் பணியில் இருந்து நீக்கப்பட்ட ராணுவ செவிலியருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணுவத்தில் செவிலியராக பணியாற்றியவர் லெப்டினன்ட் செலினா ஜான். இவர் கடந்த 1988-ம்ஆண்டு திருமணம் செய்தார். ராணுவ நர்சிங் பணியில் சேரும் செவிலியர் திருமணம் செய்தால் அவரை பணியில் இருந்து நீக்கலாம் என்ற விதி கடந்த 1977-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி செலினா ஜான் என்பவர் ராணுவத்திலிருந்து அப்போது நீக்கப்பட்டார். இதை எதிர்த்து பாதுகாப்பு படைகள் தீர்ப்பாயத்தில் செலினா ஜான் முறையிட்டார். செலினா ஜானை மீண்டும் ராணுவத்தில் சேர்க்கும்படி தீர்ப்பாயம் கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
விதிமுறை வாபஸ்: திருமணம் செய்தால் ராணுவநர்சிங் பணியில் இருந்து நீக்கலாம்என 1977-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விதிமுறை, கடந்த1995-ம் ஆண்டு திரும்பப்பெறப்பட்டது. பெண் திருமணம் செய்துகொண்டதால் வேலையை விட்டுநீக்குவது என்பது பாலினப்பாகுபாடு மற்றும் சமத்துவமின் மையை காட்டுவதாக உள்ளது.
இத்தகைய விதி தன்னிச்சையானது. இது போன்ற ஆணாதிக்க விதிமுறையை ஏற்க முடியாது. பாலினப் பாகுபாடு அடிப்படையிலான சட்டங்கள் மற்றும்விதிமுறைகளை அரசியல்சாசனப்படி அனுமதிக்க முடியாது. பெண்கள் திருமணம் செய்வதால் பணியில் இருந்து நீக்கும்விதிமுறைகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
செலினா ஜான் குறுகிய காலம் மட்டுமே தனியார் நிறுவனத்தில் செவிலியராக பணியாற்றியுள்ளார். அவருக்கு மீண்டும் பணி வழங்கி கொடுக்க வேண்டிய சம்பளத்தை வழங்குவதற்கு பதிலாக ரூ.60 லட்சத்தை இழப்பீடாக 8 வாரத்துக்குள் மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT