Published : 21 Feb 2024 01:30 PM
Last Updated : 21 Feb 2024 01:30 PM

சட்ட நிபுணர் ஃபாலி நாரிமன் மறைவு | பிரதமர் மோடி, தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: சட்ட நிபுணர் ஃபாலி நாரிமன் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல சட்ட நிபுணரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான ஃபாலி நாரிமன், இன்று அதிகாலை 12.45 மணி அளவில் டெல்லியில் உயிரிழந்தார். அவருக்கு வயது 95. வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 1929ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி பிறந்த நாரிமன், 1950ல் பாம்பே உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 1972ம் ஆண்டு மே மாதம், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டதை அடுத்து, அவர் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

போபால் விஷவாயு விபத்து வழக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் திறம்பட வாதாடியவர். 1999ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஃபாலி நாரிமன், பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளைப் பெற்றவர். இவரது மகன் ரோஷிண்டன் நாரிமன், உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.

ஃபாலி நாரிமனின் மறைவை அடுத்து பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மிகச் சிறந்த சட்ட நிபுணர்கள் மற்றும் அறிவுஜீவிகளில் ஃபாலி நாரிமனும் ஒருவர். சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.” என தெரிவித்துள்ளார்.

ஃபாலி நாரிமனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அவர் ஒரு மிகச்சிறந்த அறிவுஜீவி என புகழாரம் சூட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற சட்ட வல்லுநர், மூத்த வழக்கறிஞர் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் சிவில் உரிமைகளின் தீவிர ஆதரவாளர் ஃபாலி எஸ் நாரிமனின் மறைவு சட்ட அமைப்புக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவர் தனது கொள்கைகளில் அசைக்க முடியாத உறுதியுடன் இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x