Published : 19 Feb 2024 01:48 PM
Last Updated : 19 Feb 2024 01:48 PM

“ஒருபுறம் கோயில்கள் மேம்பாடு... மறுபுறம் ஹைடெக் உள்கட்டமைப்பு!” - பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: நாட்டில் யாத்திரை தலங்கள் மேம்படுத்தப்படும் அதேநேரத்தில், நகரங்களில் ஹைடெக் உள்கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் சாம்பல் என்ற பகுதியில் ஸ்ரீ கல்கி தாம் நிர்மான் அறக்கட்டளையால் ஸ்ரீ கல்கி தாம் கோயில் கட்டப்பட உள்ள நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கோயில் கட்டுமானத்துக்கான அடிக்கல்லை நாட்டி தொடங்கி வைத்தார். அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், துறவிகள், மதத் தலைவர்கள், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேரிய பிரதமர் நரேந்திர மோடி, "துறவிகளின் அர்ப்பணிப்பு மற்றும் பொதுமக்களின் உத்வேகம் காரணமாக புனிதமான இந்த தலத்தில் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. ஆச்சாரியார்கள், துறவிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதை பெருமையாகக் கருதுகிறேன். இந்திய நம்பிக்கையின் மற்றுமொரு மிகப் பெரிய மையமாக கல்கி கோயில் திகழும் என்ற நம்பிக்கை உள்ளது.

சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் இன்று. அந்த வகையில் இந்த நாள் மிகவும் புனிதமான, ஊக்கமளிக்கும் நாள். இந்த தருணத்தில், சத்ரபதி சிவாஜிக்கு எனது மரியாதையை பணிவுடன் சமர்ப்பிக்கிறேன். ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் பேசும்போது, 'பிரதமர் மோடிக்கு கொடுப்பதற்கு அனைவருக்கும் ஏதாவது இருக்கிறது. ஆனால், என்னிடம் எதுவும் இல்லை. என்னுடைய உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்த முடியும்' என தெரிவித்தார்.

நீங்கள் எனக்கு எதுவும் தராதது நல்லது. ஏனெனில் தற்போது காலம் மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில், ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவரது நண்பர் சுதாமா சிறிது உணவு கொடுத்திருந்தால், அது வீடியோவாக வெளியாகி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்படும். கிருஷ்ணர் ஊழல் செய்துவிட்டார் நீதிமன்றமும் தீர்ப்பளிக்கும். நீங்கள் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி, எதையும் கொடுக்காமல் இருப்பது நல்லது.

நாட்டின் 500 ஆண்டு கால காத்திருப்பு கடந்த மாதம் 22-ம் தேதி முடிவுக்கு வந்தது. அயோத்தியில் ராமபிரானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தை ராமர் பிரசன்னமான அந்த அனுபவம், அந்த தெய்வீக உணர்வு, இன்னும் நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறது. நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில், அரபு மண்ணில், அபுதாபியில் முதல் இந்து கோயில் திறக்கப்பட்டதையும் நாம் பார்த்தோம்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் காசியில் விஸ்வநாதர் கோயில் தழைத்தோங்குவதைக் காண்கிறோம். இந்தக் காலக்கட்டத்தில் காசி புத்துயிர் பெறுவதைக் காண்கிறோம். மத்தியப் பிரதேசத்தின் மகாகாலேஸ்வரர் கோயிலின் மகிமையை நாம் இந்த காலகட்டத்தில்தான் பார்த்தோம். குஜராத்தின் சோமநாதர் ஆலயத்தின் வளர்ச்சியையும், கேதார் பள்ளத்தாக்கின் மறுகட்டமைப்பையும் நாம் பார்க்கிறோம். வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தின் மந்திரத்தை நாம் உள்வாங்குகிறோம்.

இன்று, ஒருபுறம் நமது புனிதத் தலங்கள் மறசீரமைக்கப்பட்டு வருகின்றன, மறுபுறம் நகரங்களில் ஹைடெக் உள்கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இன்று கோயில்கள் கட்டப்படும் அதேநேரத்தில், நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளும் கட்டப்படுகின்றன. இன்று நமது பழங்கால சிற்பங்களும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. வெளிநாட்டு முதலீடுகளும் சாதனை அளவில் இந்தியாவுக்கு வருகின்றன" என்று பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x