Published : 19 Feb 2024 12:02 PM
Last Updated : 19 Feb 2024 12:02 PM

காங்கிரஸில் தொடர்வதாக கமல்நாத் தகவல்: ம.பி காங். தலைவர் விளக்கம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் தான் தொடர்வதாகவும், பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான செய்தி சதி என்றும் கமல்நாத் கூறியதாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜித்து பத்வாரி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி அதனை மறுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஊடகங்களை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. ஒருவரின் உறுதித் தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. நான் கமல்நாத்திடம் பேசினேன். தான் எங்கேயும் போகவில்லை என்றும், காங்கிரஸ் கட்சியில் தொடர்வதாகவும் அவர் கூறினார். ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் சதியின் ஒரு பகுதி என அவர் என்னிடம் தெரிவித்தார்.

காங்கிரஸ்காரனாவே இருந்தேன்; காங்கிரஸ்காரனாகவே இருப்பேன் என அவர் என்னிடம் கூறினார். காந்தி குடும்பத்துடனான கமல்நாத்தின் உறவு அசைக்க முடியாதது. காங்கிரஸ் கொள்கைகளை கடைப்பிடித்து அவர் வாழ்ந்து வருகிறார். கடைசிவரை அவர் அப்படியே இருப்பார். இது அவர் என்னிடம் தெரிவித்தது" என்று தெரிவித்தார். இதனை கமல்நாத் ஏன் ஊடகங்களில் கூறவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜித்து பத்வாரி, "சரியான நேரத்தில் அவர் பேசுவார். தற்போது நான் என்ன தெரிவித்தேனோ அவை அவர் சார்பாகக் கூறியதுதான்" என கூறினார்.

கமல்நாத்தும், அவரது மகனும் சிந்த்வாரா மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான நகுல்நாத்தும் கடந்த சனிக்கிழமை புதுடெல்லி சென்றனர். அவர்களுடன், அவர்களின் ஆதரவாளர்களான 10க்கும் மேற்பட்ட மத்தியப் பிரதேச எம்எல்ஏக்களும் சென்றனர். அதோடு, நகுல்நாத் தனது சமூக ஊடக பக்கங்களில் காங்கிரஸ் கட்சியில் தான் வகிக்கும் பதவி குறித்த தகவலை நீக்கினார். இதனால், கமல்நாத்தும், நகுல்நாத்தும் தங்கள் ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது.

இந்நிலையில், கமல்நாத்துக்கு நெருக்கமானவர் என அறியப்படும் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் சிங் வர்மா, கமல்நாத்தை டெல்லியில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஜ்ஜன் சிங் வர்மா, "நான் அவருடன்(கமல்நாத்) ஆலோசனை மேற்கொண்டேன். மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை எவ்வாறு நிறுத்துவது, எவ்வாறு சாதி சமன்பாடுகளை கையாளுவது என்பது குறித்துத்தான் தான் கவனம் செலுத்தி வருவதாக அவர் என்னிடம் கூறினார்.

காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவது பற்றி தான் யோசிக்கவில்லை என்றும், அது தொடர்பாக யாரிடமும் பேசவில்லை என்றும் அவர் கூறினார். வெளியாகி உள்ள செய்தியை நீங்கள் மறுக்கவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன என்று நான் சொன்னபோது, ஊடகங்கள்தான் அதனை எழுப்பின. அவர்கள்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கமல்நாத் கூறினார்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x