Published : 13 Feb 2024 12:52 PM
Last Updated : 13 Feb 2024 12:52 PM

“விவசாயிகளை சிறையில் அடைப்பது தவறானது” - மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி ஆம் ஆத்மி அரசு

புதுடெல்லி: தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக முன்னேறும் நிலையில், அவர்களை அடைப்பதற்காக பவானா மைதானத்தை தற்காலிக சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லியின் ஆம் ஆத்மி அரசு நிராகரித்துள்ளது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2021 ஜன.26ம் தேதி டெல்லி எல்லைகளில் ஏற்கெனவே விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். ஓராண்டுக்கு மேலாக நீண்ட அவர்கள் போராட்டத்தின் போது பல இடங்களில் விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த முறை அதுபோல் நடக்காமல் தடுப்பதில் டெல்லி போலீஸார் தீவிரமாக உள்ளனர்.

இந்நிலையில் இன்று (பிப்.13ம் தேதி) டெல்லி நோக்கிய விவசாயிகளின் பேரணியின் போது தடுக்கப்படும் விவசாயிகளை அடைத்து வைப்பதற்காக பவானா மைதானத்தை தற்காலிக சிறைச் சாலையாக மாற்றும் படி டெல்லி அரசுக்கு மத்திய அரசு திங்கள்கிழமை கடிதம் எழுதி இருந்தது. இந்த முன்மொழிவை டெல்லி அரசு நிராகரித்துள்ளது.

டெல்லி அரசின் பதில் கடிதம்: மத்திய அரசின் கடிதத்துக்கு டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், “விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. இரண்டாவதாக, அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் நமது அரசியலமைப்பு உரிமை வழங்கியுள்ளது. எனவே விவசாயிகளை சிறையில் அடைப்பது தவறானது.

மத்திய அரசு விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களின் நியாயமான பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். விவசாயிகள் நமது நாட்டு மக்களின் பசியாற்றுவோர். அவர்களை கைது செய்யும் நடைமுறை, வெந்த புண்ணில் உப்பைத் தடவுவதற்குச் சமம். மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாங்களும் ஓர் அங்கமாக இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை தோல்வி: முன்னதாக, சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் திட்டமிட்டிருந்த நிலையில், சண்டிகரில் மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. பேச்சுவார்த்தையில் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், விவசாயத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தலைமையில் விவசாய அமைப்பின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மத்திய அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து பஞ்சாப்பின் ஃபதேகர் சாஹேப்பில் இருந்து விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி இன்று காலையில் தொடங்கியது. விவசாயிகள் கூறும் போது, "நாங்கள் அமைதியான முறையில் போராட திட்டமிட்டுள்ளோம். எங்களுக்கு எந்த அரசியல் கட்சியினருடனும் தொடர்பு இல்லை என்றனர். விவசாயிகளின் பேரணியை தடுக்க போலீஸார் தயார் நிலையில் இருப்பது குறித்து கேட்டதற்கு, நாங்கள் எல்லையை அடைந்ததும் முடிவெடுப்போம் என்று தெரிவித்தனர்.

இதனிடையே விவசாயிகளின் பேரணியைத் தடுக்கும் நோக்கில் டெல்லியை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தினை முன்னிட்டு தேசிய தலைநகரில் ஒருமாத காலத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதாக டெல்ல போலீஸார் தெரிவித்தனர். தற்போது பேரணி தொடங்கிய நிலையில் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x