Published : 10 Feb 2018 07:40 AM
Last Updated : 10 Feb 2018 07:40 AM

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா நண்பர் வீடுகளில் சோதனை: நில ஊழல் புகாரில் அமலாக்கத் துறை நடவடிக்கை

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நண்பரது வீடுகளில் அமலாக்கப் பிரிவினர் நேற்று சோதனை நடத்தினர்.

அமலாக்கப் பிரிவினர் ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நடந்த நில ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து ஹரியாணா மாநிலம் பரீதாபாதிலுள்ள மகேஷ் நகர் என்பவரது வீடு அலுவலகங்களில் நேற்று காலை முதல் சோதனையை நடத்தி வருகின்றனர். மகேஷ் நகர், ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனமானது சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள நிறுவனமாகும்.

ராபர்ட் வதேராவும், மகேஷ் நகரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். நேற்று காலை தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நீடித்தது. சோதனையில் கிடைத்த ஆவணங்கள் போன்ற விவரங்கள் எதையும் தெரிவிக்க அமலாக்கப் பிரிவினர் மறுத்துவிட்டனர்.

இதேபோன்று கடந்த ஆண்டு டிசம்பரில் மகேஷ் நகரின் நெருங்கிய நண்பர்கள் அசோக் குமார், ஜெய்பிரகாஷ் பகர்வா ஆகியோரது வீடுகளிலும் அமலாக்கப் பிரிவினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரலில் அசோக் குமார், மகேஷ் நகர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.

இந்த நில ஊழலில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கப் பிரிவினருக்குத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து மகேஷ் நகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நில ஊழல் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில் மகேஷ் நகர் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த வழக்கில் பிகானீரின் கோலயாத் பகுதியில் 275 பிர்கா நிலம் சட்டவிரோத பணப் பரிமாற்ற முறையில் வாங்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சட்டவிரோதப் பணப் பரிமாற்ற முறையில் வாங்கப்பட்ட ரூ.1.18 கோடி மதிப்புள்ள நிலங்களை அமலாக்கத்துறையினர் இதுவரை பறிமுதல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து வதேராவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால் வதேராவின் பெயர், முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை. முதல் தகவல் அறிக்கையில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநில அரசு அதிகாரிகள், லேண்ட் மாபியாக்களின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ராபர்ட் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x