Published : 10 Feb 2018 07:06 AM
Last Updated : 10 Feb 2018 07:06 AM

நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரிக்க கோரி குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சி எம்பிக்கள் மனு: சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வலியுறுத்தல்

நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் 114 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனு நேற்று அளிக்கப்பட்டது.

மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியான பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ணன் லோயா (48), கடந்த 2014 டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் சக நீதிபதியின் குடும்ப திருமண விழாவுக்கு சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் குஜராத்தின் சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் தற்போ தைய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். லோயா மரணத்துக்குப் பிறகு பொறுப்பேற்ற நீதிபதி, வழக்கில் இருந்து அமித் ஷா வை விடுவித்து உத்தரவிட்டார்.

“நீதிபதி லோயா மரணம் இயற்கையானது அல்ல” என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழக் கை விசாரித்து வருகிறது.

இந்தப் பின்னணியில் நீதிபதி லோயா மரணம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 13 எதிர்க்கட்சிக ளைச் சேர்ந்த எம்பிக்கள் டெல்லியில் நேற்று குடியரசுத் தலை வர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உட்பட 15 கட்சிகளைச் சேர்ந்த 114 எம்பிக்கள் கையெழுத்திட் டுள்ளனர்.

அதில், “நீதிபதி லோயா மரணம் இயற்கையானது அல்ல. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு வை அமைக்க வேண்டும். இந்தக் குழு நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் செயல்பட வேண் டும்” என்று கோரப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரை சந்தித்த பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:

நீதிபதி லோயா மற்றும் அவருக்கு நெருக்கமான 2 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். 3 பேரின் மரண மும் இயற்கையானது அல்ல. இந்த விவகாரம் குறித்து சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிப்பதை எம்பிக்கள் விரும்பவில்லை. நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும். எங்களது கோரிக்கை யை வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள் ளோம். இவ்வாறு கூறினார்.

3 பேர் மரணம்

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியதாவது:

நீதிபதி லோயா நாக்பூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமான வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் காந்தல்கர் 2015-ம் ஆண்டில் மாவட்ட நீதிமன்றத்தின் 6-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். அடுத்ததாக லோயாவுக்கு மிக வும் நெருக்கமான நீதிபதி பிர காஷ் தாம்பரே ரயில் பயணத்தின்போது முன்பதிவு பெட்டியின் ‘அப்பர் பெர்த்தில்’ இருந்து கீழே விழுந்து இறந்தார். 3 பேரின் மரணமும் இயற்கையானது அல்ல. இதுகுறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x