Published : 18 Feb 2018 02:42 AM
Last Updated : 18 Feb 2018 02:42 AM

பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் நீட் தேர்வு எழுத முடியாமல் போன 15 மாணவருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் நீட் தேர்வு எழுத முடியாமல் போன 15 மாணவர்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) உத்தரவிட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தின் மேற்குப் பகுதியிலுள்ள குமுல்வாங் பகுதியில் ஏகலைவா மாதிரி அரசு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியைச் சேர்ந்த 15 பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வு எழுத பள்ளி நிர்வாகத்திடம் கடந்த ஆண்டு விண்ணப்பித்தனர். ஆனால் கவனக்குறைவால் தேர்வுக்கு பணம் செலுத்த பள்ளி நிர்வாகம் தவறிவிட்டது.

இதுதொடர்பாக பழங்குடி மாணவர்கள் சார்பில் திரிபுராவிலுள்ள மனித உரிமைகள் நல போராளி சஞ்சித் டெப்பார்மா என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய ஆணையம், பள்ளி நிர்வாகத்தின் மீது தவறு இருப்பது தெரியவரவே 15 மாணவர்களுக்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆணையம் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் 15 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணமான பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மீது திரிபுரா மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.30 லட்சத்தை அரசு வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அந்த மாணவர்களுக்கு இலவசமாக நீட் தேர்வுக்கான பயிற்சியை அரசு வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பள்ளி நிர்வாகத்தின் மீது எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு ஆணையம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதையடுத்து மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட இழப்பீட்டை தருவதற்கு திரிபுரா அரசு ஒப்புக்கொண்டு அந்தப் பணத்தையும் வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x