Published : 17 Feb 2018 03:28 PM
Last Updated : 17 Feb 2018 03:28 PM

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: ஊழியர் உட்பட 3 பேர் கைது

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,500 கோடி ரூபாய் மோசடி நடந்த புகார் தொடர்பாக வங்கியின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மோசடிகள் நடந்ததது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,500 கோடி ரூபாய் மோசடியாக பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் மற்றும் வங்கி ஊழியர்கள் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

மோசடி புகாருக்கு ஆளாகியுள்ள நிரவ் மோசடி கடந்த மாதமே தனது குடும்பத்துடன் சுவிட்சர்லாந்திற்கு சென்று விட்டார். அவரது மனைவி அமியும், நிரவ் மோடியின் தொழில் பங்குதாரரும் கிதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான மெஹல் சோஸ்கியும் வெளிநாடு சென்றுள்ளனர்.

இவர்களில் நிரவ் மோடியின் மனைவி அமி, அமெரிக்க குடியுரிமை பெற்றவர். நிரவ் மோடியின் சகோதரர் நிஷால் பெல்ஜியம் நாட்டு குடியுரிமை பெற்றவர். அவர்களை கண்காணிக்கப்படும் நபர்களாக சிபிஐ ஏற்கெனவே அறிவித்துள்ளது. மேலும் அவர்களை கைது செய்ய இண்டர்போலின் உதவியையும் சிபிஐ நாடியுள்ளது.

இந்நிலையில் வங்கி மோசடிக்கு உதவியதாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, வங்கி ஊழியர் மனோஜ் காரத் மற்றும் நிரவ் மோடி நிறுவனத்தின் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட ஊழியர் ஹேமந்த் பட் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) கைது செய்தனர்.

கிதாஞ்சலி ஜெம்ஸ், கிலில் இந்தியா லிமிடெட், நட்சத்திரா பிராண்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த 10 இயக்குனர்கள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 4,886.72 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நிரவ் மோடி தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். மும்பை, டெல்லி உட்பட நாடுமுழுவதும் பல நகரங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. நிரவ் மோடிக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கவும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x