Published : 26 Jan 2024 03:36 PM
Last Updated : 26 Jan 2024 03:36 PM

குடியரசு தின விழா அலங்கார ஊர்தி | பெண்கள் சக்திக்கு முக்கியத்துவம் - கவனம் ஈர்த்த மணிப்பூர்

புதுடெல்லி: 75வது குடியரசு தின விழா அணிவகுப்பின்போது மாநில அரசுகளின் அலங்கார ஊர்தியில் வன்முறை பாதித்த மணிப்பூர் ஊர்தியில் பெண்கள் சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

நாட்டின் 75வது குடியரசு தின விழா இன்று (26.01.2024) கோலாகலமாக நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு ஆகியவை நடைபெற்றன. மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் ஊர்வலத்தில் வன்முறை பாதித்த மணிப்பூர் ஊர்தியில் பெண்கள் சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

மணிப்பூர் மாநில ஊர்தி...: மணிப்பூர் மாநில ஊர்தியை பொறுத்தவரை பெண்கள் சக்தியை கொண்டாடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் இன ரீதியிலான வன்முறை வெடித்தது. குகி பழங்குடி மற்றும் மைதேயி சமூகம் இடையிலான வன்முறையில், குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரமான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தாக்கங்களுக்கு மத்தியில் தான் குடியரசு தின விழாவில் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் ஊர்வலத்தில் மணிப்பூர் மாநில ஊர்தி முதலில் வந்தது. மேலும், மணிப்பூர் மாநில ஊர்தியானது பெண்கள் சக்தியை கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. மணிப்பூரின் மிகப்பெரிய நீர்நிலைகளில் ஒன்றான லோக்டாக் ஏரியிலிருந்து ஒரு பெண் தாமரை தண்டுகளை சேகரிக்கும் காட்சியுடன், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இயங்கி வரும் இமா கீதெல் சந்தை தொடர்பான காட்சிகளும் அலங்கார ஊர்தியில் இடம்பெற்றன.

இமா கீதெல்.. மணிப்பூர் மொழியின் இதன் அர்த்தம் 'அம்மாவின் சந்தை' என்பதாகும். மாநிலத் தலைநகரான இம்பாலின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் சந்தையே இந்த இமா கீதெல். முழுக்க முழுக்க பெண் வணிகர்களால் நடத்தப்படும் சந்தை இது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த சந்தையில் சுமார் 5000-6000 பெண்கள் விற்பனையாளர்களாக உள்ளனர். இந்த சந்தையில் ஆண்கள் கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கடைகள் அமைக்க ஆண்கள் முற்பட்டால் மணிப்பூர் அரசாங்கத்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இந்த சந்தையின் காட்சிகள் மணிப்பூரின் அலங்கார ஊர்தியில் இடம்பெற்றிருந்தது.

இவை தவிர, அலங்கார ஊர்தியில் இந்தியாவின் முதல் தாமரை பட்டு உற்பத்தியாளர் குறித்த தகவல்களும் இடம்பெற்றன. மணிப்பூரில் உள்ள தங்கா கிராமத்தைச் சேர்ந்த பிஜியசாந்தி டோங்ப்ராம், சமீபத்தில் நாட்டின் முதல் தாமரை பட்டு உற்பத்தியாளர் ஆனார். இதை கொண்டாடும் விதமாக மணிப்பூர் அலங்கார ஊர்தியில் காட்சிகள் இடம்பெற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x