Last Updated : 23 Jan, 2024 12:09 PM

1  

Published : 23 Jan 2024 12:09 PM
Last Updated : 23 Jan 2024 12:09 PM

அயோத்தி கோயில் ராமர் பிரதிஷ்டை விழா - முக்கியத் துளிகளின் தொகுப்பு

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் நேற்று (ஜன.22) பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்ட ராமர் பிரதிஷ்டை விழாவில் குறிப்பிடத்தக்க பல விஷயங்கள் இடம்பெற்றன. அவற்றை இங்கே காணலாம்.

ராமர் சிலை பிரதிஷ்டை விழாவுக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் அயோத்தியில் வந்திறங்கினார். அப்போது புதிய ராமர் கோயிலை ஹெலிகாப்டரில் இருந்தபடி தனது கைப்பேசியில் படம் எடுத்து வெளியிட்டார் பிரதமர் மோடி.

கைப்பேசி எடுத்து செல்ல அனுமதி: இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் தம்முடன் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால், மகிழ்ந்த பெரும்பாலனவர்கள் தங்கள் கைப்பேசிகளில் கோயில் வளாகத்தை படம் எடுத்தனர். அப்போது பிரதமர் மோடி வருகையை கூடியிருந்த துறவிகள் உள்ளிட்ட அனைவரும் ஒரே சமயத்தில் ஆர்வமுடன் படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ராமர் கோயிலை சுற்றி அமைந்த பிரம்மாண்டமான வளாகத்தின் திறந்தவெளியில் அழைப்பாளர்கள் அமர வைக்கப்பட்டனர். கடும் குளிரின் காரணமாக அவர்கள் தம் காலணிகளுடன் வர அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கோயில் பிரதிஷ்டைக்கு வந்த பிரதமர் மோடி காலணி இன்றி வெறும் காலுறைகளை மட்டும் அணிந்திருந்தார்.

நேரடி ஒளிபரப்பு: கோயிலின் வளாகத்தின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட திரைகளில் ராமர் சிலை பிரதிஷ்டையின் நேரடிக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அயோத்தி நகரின் பல பொது இடங்கள், கோயில்கள் மற்றும் மடங்களிலும் நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தவிர வேறு எந்த மாநில முதல்வர்களுக்கும் இவ்விழாவில் அழைப்பு இல்லை. ஆனால், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என மற்ற அனைவருக்கும் தனித்தனியாக ஒருநாள் கோயில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

ராமர் சிலை பிரதிஷ்டையில் பிரதமர் மோடியுடன் உபியின் ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் தலைவர் மோகன் பகவத், விஷ்வ இந்து பரிஷத்தின் பொதுச்செயலாளர் அலோக் குமார், முன்னாள் பொதுச்செயலாளரான மறைந்த அசோக் சிங்காலின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் பங்கேற்றனர்.

பூஜைக்கு தாமரை மலர்: அயோத்தி கோயிலில் நுழைந்த பிரதமர் மோடி முதலாவதாக உள்ளே இருந்த விநாயகர் முன் அமர்ந்து பூஜை செய்தார். பிறகு ராமர் பிரதிஷ்டைக்காக அதன் கருவறையில் அமர்ந்து பூஜையை துவக்கினார். பூஜையில் கடவுள் சிலைகள் மீது தூவுவதற்கு பெரும்பாலும் தாமரை மலர்களின் இதழ்களே பயன்படுத்தப்பட்டன.

விழாவிற்கு வந்த பிரதமர் மோடி தங்கநிற பட்டுஜிப்பாவுடன் அதன் மீது பட்டு அங்கவஸ்திரம் மற்றும் வேட்டி பஞ்சகட்ச முறைப்படி அணிந்திருந்தார். பிரதமருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேற்றைய விழாவிற்காக காலை முதல் இரண்டு ஹெலிகாப்டர்கள் கோயிலை வட்டமிட்டபடி பறந்து மலர்களை தூவியவண்ணம் இருந்தன. இதற்காக, பலவகை மலர்கள் பல டன் எடையில் பயன்படுத்தப்பட்டன.

ஆதீனங்களுக்கு அழைப்பு: ஸ்ரீராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில், தமிழகத்தின் அனைத்து ஆதீனங்களுக்கும் முறையான அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. எனினும், திருக்கோயில் விழாக்கள் காரணமாக பல ஆதீனங்களால் அயோத்தி நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை. தூத்துக்குடி செங்கோல் ஆதீனம்மற்றும் தமிழக ஜீயர் சுவாமிகள் விழாவிற்கு வந்திருந்தனர்.

தொழிலதிபர்கள்: கோயில் விழா அழைப்பை ஏற்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மற்றும் பல முக்கியப் பெருநிறுவனங்களின் தலைவர்களும் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

பாலிவுட் நடிகர்கள்: பாலிவுட் திரையுலக நட்சத்திரங்களில் , அமிதாப்பச்சன் தனது மகன் அபிஷேக் பச்சனுடனும், ஜாக்கி ஷெராப் அவரது மகன் டைகர் ஷெராபி உடனும் வந்திருந்தனர். அக்‌ஷய் குமார், அனுபம் கேர், மாதுரி தீட்ஷித், விவேக் ஓபராய், கங்கணா ரனாவத், ஆலியா பட், ரண்வீர் கபூர், ரந்தீர் கபூர், காத்ரீனா கைப், ரந்தீப் ஹுடா உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.

தமிழ், தெலுங்கு திரையுலகம்:

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டோரும், தெலுங்கு பட உலகில் அல்லு அர்ஜுன், பவன் கல்யாண், சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விளையாட்டு வீரர்களில் சாய்னா நேவால், விராட் கோலி, நீரஜ் சோப்ரா, அனில் கும்லே, சச்சின் டெண்டுல்கர், வெங்கடேஷ பிரசாத் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

அத்வானி வரவில்லை: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முக்கியக் காரணமாக இருந்த முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி கடும் குளிர் காரணமாக விழாவிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

உமாபாரதி ஆனந்த கண்ணீர்: ராமர் கோயில் போராட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய பெண் துறவிகளான முன்னாள் மத்திய அமைச்சரான உமா பாரதியும், சாத்வீ ரிதாம்பராவும் விழாவிற்கு வந்திருந்தனர். ராமர் சிலை பிரதிஷ்டைக்கு பின் இருவரும் ஆனந்தக் கண்ணீருடன் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x