Published : 19 Jan 2024 01:35 PM
Last Updated : 19 Jan 2024 01:35 PM

டெல்லி அரசு பங்களாவை காலி செய்தார் மஹுவா மொய்த்ரா

மஹுவா மொய்த்ரா | கோப்புப்படம்

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.மஹுவா மொய்த்ரா தனது டெல்லி அரசு பங்களாவை இன்று (வெள்ளிக்கிழமை) காலி செய்தார். இதனிடையே எஸ்டேட் இயக்குநரகம் பங்களாவுக்கு குழு ஒன்றை அனுப்பியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரசு பங்களாவை காலி செய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மஹுவா தாக்கல் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த அடுத்த நாள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவாவுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்ய எஸ்டேட் இயக்குநரகம் குழு ஒன்றை அனுப்பியுள்ளது”என்று தெரிவித்தார். எஸ்டேட் இயக்குநரகம் அனுப்பியிருந்த நோட்டீஸில் “மஹுவாவுக்கு போதிய அவகாசம் வழங்கப்பட்டது. அவர் சட்டவிரோதமாக பங்களாவில் தங்கியிருக்கவில்லை என்பதை நிரூபிக்கத் தவறி விட்டார்” என்று தெரிவித்திருந்தது. இதனிடையே மருத்துவக் காரணங்களை எடுத்துக் கூறி, அரசு பங்களாவை காலி செய்யும் படி எஸ்டேட் இயக்குநரகத்தால் அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மஹுவா மொய்த்ரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது வியாழக்கிழமை நடந்த விசாரணையில் மஹுவாவின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரிஜ் குப்தா, “அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

அப்போது பேசிய நீதிபதி கிரிஷ் காத்பாலியா, “சட்டமியற்றுபவர்களாக பதவியேற்ற எம்.பி.கள் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்கள் அரசு பங்களாவில் தொடர்வது குறித்து எந்த ஒருகுறிப்பிட்ட விதிகளும் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்படவில்லை. மஹுவாவுக்கு எம்.பி. என்ற தகுதியின் அடிப்படையிலேயே அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அத்தகுதி முடிவுக்கு வந்து விடுகிறது. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போதிலும், அவரால் பங்களாவில் தொடர்ந்து தங்கியிருக்க முடியாது. அதனால் அரசியல் சாசன பிரிவு 226-ன் கீழ் மனுதாரர் கோரிய பாதுகாப்பினை வழங்க முடியாது. அதனால் இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் அப்போது திரிணமூல் எம்.பி., மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பாஜக எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை கடந்த ஆண்டு நவ.9-ஆம் தேதி வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

இந்தப் பரிந்துரையை ஏற்ற மக்களவை மஹுவா மொய்த்ராவை டிசம்பர் 8-ஆம் தேதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது. எம்.பி., பதவியில் இருந்து மஹுவா நீக்கப்பட்டத்தைத் தொடர்ந்து அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை ஜன.7-ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு பங்களாவை ஒதுக்கீடு செய்யும் அரசு எஸ்டேட் இயக்குநரகம் கேட்டுக்கொண்டது. மஹுவா தனது பங்களாவை காலி செய்யாத நிலையில், அவர் ஏன் இன்னும் அரசு பங்களாவை காலி செய்யவில்லை என்று மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி ஜன.8-ஆம் தேதி எஸ்டேட் இயக்குநரகம் மீண்டும் மஹுவாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. மஹுவா பங்களாவைக் காலி செய்யாத நிலையில் பங்களாவை உடனடியாக காலி செய்ய வலியுறுத்தி எஸ்டேட் இயக்குநரகம் புதன்கிழமை மீண்டும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x