Published : 17 Jan 2024 12:23 PM
Last Updated : 17 Jan 2024 12:23 PM

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு

கோப்புப்படம்

முரே: மணிப்பூர் மாநிலம் மோரே நகரில் இன்று (புதன்கிழமை) குகி இனத்தவருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக அங்கே மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கமாண்டோ படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

தகவல்களின்படி, முரே அருகே உள்ள பாதுகாப்புப் படையினரின் சாவடி மீது குகி பயங்கரவாதிகள் வெடி குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் காயம் அடைந்திருந்த கமாண்டோ வீரர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் சோமோர்ஜித் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் மற்றொரு கமாண்டோ வீரரும் காயமடைந்துள்ளார். கலவரக்காரர்கள் வார்டு 7 அருகே நடத்திய இந்தத் துப்பாக்கிச் சூடு சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. முரேவில் போலீஸ் அதிகாரி ஒருவரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் இருவரை போலீஸார் கைது செய்த நிலையில் இந்த மோதல் நடத்துள்ளது.

இதனிடையே பொது அமைதிக்கு குந்தகம், மனித உயிர்கள் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அங்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சேவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இம்பாலின் மேற்கு மாவட்டத்தின் குட்ரூக் கிராமத்தில் ஊர் காவலர்களுக்கும் குகி கலவரக்காரர்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடந்தது. இது மத்திய படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

முன்னதாக, கடந்த அக்.மாதம் ஆனந்த் என்ற காவல் உயர் அதிகாரி கொலை தொடர்பாக பிலிப் கோங்சாய் மற்றும் ஹேமோகோலால் ஆகிய இருவரை உள்ளூர் போலீஸார் திங்கள் கிழமை கைது செய்தனர். அவர்கள் இருவரும் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து போலீஸார் அவர்கள் இருவரையும் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். அவர்கள் இருவரும் 9 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு பிஸ்டல், ஒரு சீன கையெறி குண்டு, ஒரு ஏ கே ரக துப்பாக்கி, 10 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஏற்பட்ட மோதலில் இதுவரை 200க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x