Published : 16 Jan 2024 06:49 PM
Last Updated : 16 Jan 2024 06:49 PM

ராமர் கோயில் திறப்பு நாளன்று மேற்கு வங்கத்தில் மத நல்லிணக்க பேரணி: மம்தா அறிவிப்பு

கொல்கத்தா: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள வரும் 22-ம் தேதி அன்று மேற்கு வங்கம் முழுவதும் மத நல்லிணக்கப் பேரணி நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பல்வேறு கோயில்கள் குறித்து நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். நான் அதுபற்றி எதுவும் சொல்வதில்லை. மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், பண்டிகை என்பது அனைவருக்குமானது. ஜனவரி 23, 26 ஆகிய தேதிகளை நாங்கள் கொண்டாட இருக்கிறோம். ஜனவரி 22-ம் தேதி பேரணி நடைபெறும். மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான காளிகாட்டில் பூஜை செய்த பிறகு, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் அங்கிருந்து பேரணி தொடங்கும்.

இந்தப் பேரணி அனைத்து மதங்களையும் இணைப்பதாக இருக்கும். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும், கோயில்கள், தேவாலயங்கள், குருத்துவாராக்கள், மசூதிகள் ஆகியவற்றுக்குச் செல்வார்கள். இந்த பேரணி தெற்கு கொல்கத்தாவின் சர்க்கஸ் மைதானத்தில் நிறைவு பெறும். அதனை அடுத்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெறும். அன்றைய தினம் மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில், நேசத்தை வெளிப்படுத்தக்கூடிய பேரணிகள் நடத்தப்படும். அனைத்து மதங்களும் சமமானவையே. எனவே, இந்த பேரணிகளில் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் கலந்து கொள்வார்கள்.

பண்டிகைகள்தான் மக்களை ஒருங்கிணைக்கும் தன்மை கொண்டது. ஒவ்வொருவரோடும் நாம் பேசக்கூடிய தருணம் அது. தேர்தலைக் கருத்தில் கொண்டு ராமர் கோயில் விவகாரத்தில் பாஜக என்னவெல்லாம் வித்தை காட்ட நினைக்கிறதோ காட்டட்டும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், பிற மதங்கள் அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. நான் உயிரோடு இருக்கும் வரை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே பாகுபாடு காட்டப்படுவதை அனுமதிக்க மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முழுக்க முழுக்க மோடியின் அரசியல் விழாவாக மாற்றிவிட்டனர்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அதன் விவரம் > “மோடியின் அரசியல் விழா ஆகிவிட்டது அயோத்தி ராமர் கோயில் திறப்பு நிகழ்வு” - ராகுல் காந்தி விமர்சனம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x