Published : 14 Jan 2024 02:49 PM
Last Updated : 14 Jan 2024 02:49 PM

மிலிந்த் தியோரா விலகலால் காங்கிரசுக்கு பாதிப்பு இல்லை: ஜெயராம் ரமேஷ்

கோப்புப்படம்

மும்பை: காங்கிரஸ் கட்சியில் ஒரு மிலிந்த் தியோரா விலகினால், லட்சக்கணக்கான மிலிந்த் தியோராக்கள் கட்சியில் இணைவார்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக கருதப்பட்டவருமான மிலிந்த் தியோரா, அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவில் அவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்தீப் திக்ஷித், "தியோராவைப் போன்ற ஒருவர் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவின் கூட்டணிக் கட்சியில் இணையப்போவது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. மனிதனுக்கு இரண்டு பெரிய பலவீனங்கள் இருக்கின்றன. பயமும், பேராசையுமே அவை" என தெரிவித்தார்.

மிலிந்த் தியோரா வெளியேறியதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அக்கட்சியின் தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். "இது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. ஒரு மிலிந்த் தியோரா வெளியேறுவார். ஆனால் லட்சக்கணக்கான மலிந்த் தியோராக்கள் எங்களுடன் வந்து சேருவார்கள். காங்கிரஸை இது எந்த வகையிலும் பாதிக்காது. இந்த முடிவு பிரதமர் மோடியால் எடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "வெள்ளிக்கிழமை காலை 8.52க்கு மிலிந்த் தியோரா எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அதற்கு மதியம் 2.47க்கு நீங்கள் கட்சி மாற திட்டமிடுகிறீர்களா? என்று பதில் அனுப்பியிருந்தேன். 2.48க்கு அவர், இப்போது உங்களிடம் பேச முடியாதா? என்று பதில் அனுப்பியிருந்தார். அதற்கு நான் உங்களை அழைக்கிறேன் என்று 3.40க்கு பதில் அனுப்பினேன். அவரை அழைத்துப் பேசினேன். அவர் (தியோரா) தெற்கு மும்பை தொகுதி சிவசேனா வசம் இருப்பது குறித்து கவலைப்படுவதாக தெரிவித்தார். அது குறித்து ராகுல் காந்தியை சந்தித்து அந்தத் தொகுதி குறித்து விளக்கம் அளிக்க விரும்பினார். அதுபற்றி நானும் ராகுல் காந்தியிடம் பேசவேண்டும் என்றும் விரும்பினார். இவை அனைத்தும் ஒரு வெளிப்படையான கேலி கூத்தே. அவர் மனதளவில் வெளியேற முடிவு செய்து விட்டார். தியோரா வெளியேறும் முடிவு நிச்சயமாக பிரதமர் மோடியால் எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

மிலிந்த் தியோரா வெளியிட்ட எக்ஸ் பதிவு: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த மிலிந்த் தியோரா, "எனது அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான அத்தியாயம் முடிவடைகிறது. காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன். காங்கிரஸ் கட்சியுடனான எனது குடும்பத்தின் 55 ஆண்டு கால உறவு முடிவடைகிறது. இத்தனை ஆண்டுகள் அனைத்து தலைவர்கள், சக ஊழியர்கள், தொண்டர்கள் என ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியுள்ளனாக இருப்பேன்" என்று தெரிவித்திருந்தார்.

தியோரா வெளியேறியது ஏன்?: மும்பை தெற்கு மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரான மிலிந்த் தியோரா, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அந்த தொகுதியை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கேட்பது தொடர்பாக தனது அதிருப்தியை சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார். மும்பை தெற்கு தொகுதி தொடர்பாக காங்கிரஸ் - சிவ சேனா(உத்தவ் தாக்கரே அணி ) இடையே மோதல் வெடித்த நிலையில், மிலிந்த் தியோரா காங்கிரஸில் இருந்து விலகி உள்ளார். மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிட மிலிந்த் தியோரா விருப்பமாக இருப்பதால் அவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவில் இணையலாம் என்ற ஊகம் நிலவுகிறது. தெற்கு மும்பை தொகுதி தற்போது, உத்தவ் தாக்கரே சிவ சேனாவின் அரவிந்த் ஸ்வாந்த் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான அசோக் சவான், மிலிந்த் தியோரா தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட விரும்புதாகவும், ஆனால் மகாவிகாஸ் கூட்டணிக்குள்ள புரிந்துணர்வு தற்போதைய தொகுதியின் எம்பிக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.

தெற்கு மும்பை தொகுதியில் சமரசமில்லை: மிலிந்த் தியோரா காங்கிரஸில் இருந்து வெளியேறிய நிலையில் உத்தவ் தாக்கரே அணி சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஸ்வாந்த் கடந்த இரண்டு முறையாக அந்தத் தொகுதியின் எம்.பி.யாக இருந்து வருகிறார். அவர் மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புவதில் என்ன தவறு இருக்கிறது. தெற்கு மும்பை தொகுதியில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. முரளி தியோராவை நாங்கள் நன்கு அறிவோம். கட்சிக்காக பணியாற்றுவது மற்றும் அதற்காக தியாகம் செய்வது என்ன என்பதை நாங்கள் நன்கு அறிவோம். தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒருவர் கட்சி மாறுவது என்பது மாநிலத்தில் புதிய போக்கு உருவாகியிருப்பதையே காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x