Published : 06 Jan 2024 07:46 PM
Last Updated : 06 Jan 2024 07:46 PM

“இஸ்ரோவில் பாலினப் பாகுபாடு கிடையாது... திறமைக்கே முக்கியத்துவம்” - ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி

நிகர் ஷாஜி

புதுடெல்லி: சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி புதிய சாதனை படைத்திருக்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 திட்டத்தின் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி (Nigar Shaji) உள்ளார். இவர் “இஸ்ரோவில் பாலினப் பாகுபாடு கிடையாது. திறமையே முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை வடிவமைத்தது. இதில் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம், இந்திய அறிவியல் கல்வி மற்றும்ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை முக்கியப் பங்காற்றின. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப். 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விண்கலத்தை பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ.தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) எனும் புள்ளிக்கு மிக அருகே நிலைநிறுத்த இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி, 127 நாட்கள் பல்வேறுகட்ட தடைகளைக் கடந்து, சூரியனை நோக்கி சீரான வேகத்தில் பயணித்த ஆதித்யா விண்கலம், தற்போது எல்-1 புள்ளியை மையமாகக் கொண்ட சூரிய ஒளி வட்டப் பாதையில் (Halo Orbit) இன்று மாலை 4 மணியளவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த நிகர் சாஜி என்ற பெண். முன்னதாக, சந்திரயான்-2 திட்டத்துக்கு எம்.வனிதா தலைமை தாங்கினார். மேலும், பூமியை படம் பிடிக்கும் செயற்கைக்கோள் தயாரிப்பில் தேன்மொழி தலைமை தற்போதைய சந்திரயான்-3 திட்டத்தின் துணை திட்ட இயக்குநராக கல்பனா பொறுப்பேற்றார். ஆண்களும் பெண்களும் ஒன்றுகூடி உழைத்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். தற்போது நிகர் சாஜி இஸ்ரோவில் உள்ள பல 'ஷீரோ'களில் ஒருவராக மாறியிருக்கிறார்.

இவர் ஆதித்யா-1 திட்ட இயக்குநராக இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “பெண்கள் இஸ்ரோவில் பணிபுரிவதற்கு எந்தவொரு தடையும் கிடையாது. இஸ்ரோவில் பணிபுரிய திறமை மட்டும்தான் முக்கியமே தவிர, அவர்கள் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை. திறமைக்கு மட்டுமே முக்கியம் கொடுக்கப்படும். ஆதித்யா ஒரு சிக்கலான அறிவியல் செயற்கைக்கோள். ஒன்பது வருடங்களாக அயராது உழைத்திருக்கிறோம். இத்தகைய பலதரப்பட்ட பணி கலாச்சாரங்களைக் கொண்ட இந்திய அறிவியல் நிறுவனங்களுடன் பணிபுரிவது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த நிகர் சாஜி? - தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ஷேக் மீரான்- சைதுன் பீவீ தம்பதியின் 3-வது மகள் நிகர் சாஜி. இவரது சகோதரர் ஷேக் சலீம், சென்னை ஐஐடி-ல் முனைவர் பட்டம் பெற்றவர். பெங்களூருவில் விஞ்ஞானியாகவும், ஆழ்வார்க்குறிச்சி கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிகர் சாஜி செங்கோட்டை அரசு ஆரியநல்லூர் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி, ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செங்கோட்டை எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். 12-ம் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இளங்கலையும், பிட்ஸ் நிறுவனத்தில் முதுகலையும் படித்தார்.

1987-ல் இஸ்ரோவில் பணி கிடைத்தது. கடந்த 36 ஆண்டுகளாக அங்கு பணிபுரிகிறார். அவரது கணவர் ஷாஜகான், துபாயில் பொறியாளராகப் பணிபுரிகிறார். அவர்களது மகன் முகமது தாரிக், நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாகப் பணிபுரிகிறார். மகள் தஸ்நீம் மங்களூருவில் எம்.எஸ். (இஎன்டி) படித்து வருகிறார். ஆதித்யா விண்கலம் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, நிகர் சாஜி கடந்த ஆண்டு நாசா சென்று வந்தார். நோபல் பரிசு பெற்ற மேரி கியூரியின் வெற்றிகளைப் பற்றி கேள்விப்பட்ட இவருக்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை செய்ய தைரியம் கிடைத்ததாக கூறுகிறார்.

அவர் ஒரு மருத்துவராக வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் விரும்பியுள்ளனர். ஆனால் அவருக்கு ஒரு பொறியாளராக வேண்டும் என்பதே ஆசையாக இருந்திருக்கிறது. நிகரின் தந்தை ஷேக் மீரான் ஒரு கணிதப் பட்டதாரி ஆவார். தான் ஒரு பொறியாளராக வேண்டும் என்பதற்கு தனது தந்தைதான் இன்ஸ்பிரேசனாக இருந்ததாக கூறுகிறார். அரசுப் பள்ளியில் படித்தவர் ஆதித்யா விண்கலத்தை ஏவும் அளவுக்கு உயர்ந்துள்ளது தென்காசி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x