மாநில பாடத்திட்டத்தில் படித்த சாதனைத் தமிழர்கள்: நிகர் ஷாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி
ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி
Updated on
2 min read

சென்னை: சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1-ன் திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜியை அகமகிழ்ந்து பாராட்டுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜியை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன். தமிழகத்தின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து சந்திரயான் முதல் ஆதித்யா வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்", என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சந்திரயான்-1 திட்டத்தில் மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-2 திட்டத்தில் வனிதா, சந்திரயான்-3 திட்டத்தில் வீரமுத்துவேல், மங்கள்யான் திட்டத்தில் அருணன் சுப்பையா ஆகியோர் திட்ட இயக்குநர்களாக இருந்து திறம்படச் செயலாற்றினர். தமிழகத்தைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகளின் வரிசையில், ஆதித்யா-1 திட்ட இயக்குநர் நிகர் சாஜியும் இணைந்துள்ளார்.

நிகர் சாஜியின் பின்னணி: தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ஷேக் மீரான்- சைதுன் பீவீ தம்பதியின் 3-வது மகள் நிகர் சாஜி. இவரது சகோதரர் ஷேக் சலீம், சென்னை ஐஐடி-ல் முனைவர் பட்டம் பெற்றவர். பெங்களூருவில் விஞ்ஞானியாகவும், ஆழ்வார்க்குறிச்சி கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். செங்கோட்டையில் வசித்துவரும் ஷேக் சலீம் கூறியதாவது: எனது தந்தை அந்தக் காலத்திலேயே பி.ஏ. ஹானர்ஸ் படித்தவர். நானும், எனது சகோதரிகளும் அரசுப் பள்ளியில்தான் படித்தோம்.

நிகர் சாஜி செங்கோட்டை அரசு ஆரியநல்லூர் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி, ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செங்கோட்டை எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். 12-ம் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இளங்கலையும், பிட்ஸ் நிறுவனத்தில் முதுகலையும் படித்தார்.

1987-ல் இஸ்ரோவில் பணி கிடைத்தது. கடந்த 36 ஆண்டுகளாக அங்கு பணிபுரிகிறார். அவரது கணவர் ஷாஜகான், துபாயில் பொறியாளராகப் பணிபுரிகிறார். அவர்களது மகன் முகமது தாரிக், நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாகப் பணிபுரிகிறார். மகள் தஸ்நீம் மங்களூருவில் எம்.எஸ். (இஎன்டி) படித்து வருகிறார். ஆதித்யா விண்கலம் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, நிகர் சாஜி கடந்த ஆண்டு நாசா சென்று வந்தார். அரசுப் பள்ளியில் படித்தவர் ஆதித்யா விண்கலத்தை ஏவும் அளவுக்கு உயர்ந்துள்ளது தென்காசி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் பணியில் அர்ப்பணிப்புடன் இருப்பவர் நிகர் சாஜி. அதனால்தான் தற்போது உயர்ந்த நிலையை அடைந்துள்ளார். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in