Published : 04 Jan 2024 05:15 PM
Last Updated : 04 Jan 2024 05:15 PM

“லட்சத்தீவின் இயற்கை அழகும் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது” - பிரதமர் மோடி சிலாகிப்பு

புதுடெல்லி: லட்சத்தீவின் இயற்கை அழகும் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சிலாகித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயண அனுபவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு, அங்கு எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களையும் அவர் இணைத்துள்ளார். "லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது. கற்பதற்கும் வளர்வதற்குமான வாய்ப்புள்ளதாக எனது மாலத்தீவு பயணம் அமைந்தது.

லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்காக நன்றி கூறுகிறேன்.

— Narendra Modi (@narendramodi) January 4, 2024

லட்சத்தீவில் மேம்பட்ட வளர்ச்சியின் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம். சிறந்த உள்கட்டமைப்பு, சிறந்த சுகாதாரம், வேகமான இணையம், குடிநீர் ஆகிய வசதிகளை ஏற்படுத்தவதோடு, உள்ளூர் கலாச்சாரத்தை பாதுகாத்து கொண்டாடுவதும் அரசின் நோக்கமாக உள்ளது. லட்சத்தீவில் துவக்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் இந்த உணர்வை பிரதிபலிக்கின்றன.

அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் உரையாடும் சிறந்த வாய்ப்பு கிடைத்தது. ஆரோக்கியம், தற்சார்பு, பெண்கள் முன்னேற்றம், விவசாய நடைமுறைகள் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியை அறிந்தபோது அது ஊக்கமளிப்பதாக இருந்தது. நான் அங்கு கேட்டவை உண்மையில் வளர்ச்சி சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது என்பதையே.

லட்சத்தீவின் இயற்கை அழகும் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது. 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக எவ்வாறு உழைப்பது என்பது குறித்து சிந்திக்க இது எனக்கு வாய்ப்பளித்தது. சாகச வீரர்களைக் காணவும் அவர்களை அரவணைக்கவும் விரும்புபவர்கள், தங்களுக்கான பயணப் பட்டியலில் லட்சத்தீவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தண்ணீருக்குள் மூழ்கி உள்ளே இருக்கும் இயற்கை காட்சிகளைக் காண்பதற்கான முயற்சியில் நான் ஈடுபட்டேன். அது ஓர் உற்சாகமான அனுபவம்.

அழகிய கடற்கரைகளில் அதிகாலைப் பொழுதில் நடைபயணம் மேற்கொண்டது தூய்மையான பேரின்பத்தை அளித்தது" என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x