Last Updated : 02 Jan, 2024 05:54 AM

 

Published : 02 Jan 2024 05:54 AM
Last Updated : 02 Jan 2024 05:54 AM

சீனாவின் சவாலை எதிர்கொள்ள தேசிய அளவில் ஒருங்கிணைந்த முன்னெடுப்பு அவசியம்: யுஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் பி.கே.சர்மா கருத்து

புதுடெல்லி: சீனாவின் சவாலை எதிர்கொள்ள தேசிய அளவில் ஒருங்கிணைந்த முன்னெடுப்பு அவசியம் என்று இந்திய பாதுகாப்புத் துறையின் சிந்தனைக் குழுவான யுஎஸ்ஐ-யின் இயக்குநர் ஜெனரல் பி.கே.சர்மா கூறியுள்ளார்.

இந்தியாவின் பழமையான பாதுகாப்பு சிந்தனை குழுவாக இருப்பது யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷன் ஆப் இந்தியா (யுஎஸ்ஐ). இது, 1870-ல் துவக்கப்பட்டது. இந்தியாவின் ராணுவ பாரம்பரியம் மற்றும் கோட்பாடு, பாதுகாப்பு புவிசார் அரசியல், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கை, திறன் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்டவற்றை கையாளுகிறது. ஒவ்வொரு ஆண்டும் யுஎஸ்ஐ மூலமாக ஏராளமான பதிப்புகள் வெளியிடப்படுகின்றன. இந்த அமைப்பின் தலைமை அதிகாரியான இயக்குநர் ஜெனரல் பி.கே.சர்மா தனது புத்தாண்டு செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான பி.கே.சர்மா, ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் கூறியதாவது: நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள். 2023-ம் ஆண்டில், ஒரு நிலையற்ற உலகத்தை கண்டோம். இதற்கு தலிபன்மயமான ஆப்கானிஸ்தான், உக்ரைன் மற்றும் காசாவில் தொடரும் மோதல்கள், இதன் தொடர் தாக்கமான செங்கடலிலும் ஏற்பட்டுள்ள மோதல்கள் ஆகியவை காரணம் ஆகும். இவற்றால், உலகப் பொருளாதார வர்த்தகத்தில் பெரும் இடையூறுகள் ஏற்பட்டன. இதேபோல், செயற்கைநுண்ணறிவு, பெரிய தரவுகள் ஆய்வு ஆகிய அதிநவீன தொழில்நுட்பத்தால் தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைகிறது. இதனுடன் சேர்த்து செமி கண்டக்டர்கள் மற்றும் அரிய கனிமவளங்கள் மீதான புவிசார் அரசியல் நடவடிக்கைகள் 2024-ம் ஆண்டிலும் சவாலாகத் தொடரக்கூடும்.

நம்பிக்கை நட்சத்திரம்: மேற்கூறிய அனைத்தும் தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் 2024-ம் ஆண்டில் தென்படுகின்றன. ஒரே ஆறுதல் என்னவெனில், உலகின் தெற்கு பிராந்திய நாடுகளின் (குளோபல் சவுத்) எழுச்சியானது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது.

இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சிப் பாதையில் மறைமுக சவாலாக சீனா தென்படுகிறது. சீனாவின் சவாலை எதிர்கொள்ள விரிவான தேசிய ஒருங்கிணைந்த முன்னெடுப்பை உருவாக்க வேண்டும்.

நமது உள்நாடு, வெளிநாடு மற்றும் ஒன்றிணைந்த அனைத்து துறைகளின் முப்பரிமாண அணுகுமுறையால் இச்சவாலை வெற்றி கொள்ளலாம். இந்த மூலோபாய அனுகுமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு தேசத்தின் கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்புகள், தொழில் கூட்டமைப்புகள், வங்கி மற்றும் நிதி நிறுவன சம்மேளனங்கள் ஆகியவையுஎஸ்ஐ-யுடன் ஒன்றிணைந்து செயல்பட அழைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x