Last Updated : 09 Jan, 2018 08:57 AM

 

Published : 09 Jan 2018 08:57 AM
Last Updated : 09 Jan 2018 08:57 AM

டிவிட்டரில் சித்தராமையா - யோகி ஆதித்யநாத் மோதல்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் பாஜக சார்பாக, '' மாற்றத்துக்கான பயண யாத்திரை'' நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் (பாஜக) யோகி ஆதித்யநாத் நேற்று முன் தினம் பெங்களூரு வந்தார்.

இதையொட்டி கர்நாடக மாநில (காங்கிரஸ்) முதல்வர் சித்தராமையா, யோகி ஆதித்யநாத்தின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து, ''உங்களை எங்கள் மாநிலத்திற்கு வரவேற்கிறேன். எங்களிடம் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம். எங்கள் மாநிலத்தில் இருக்கும் இந்திரா கேண்டீன் (மலிவு விலை உணவகம்), நியாயவிலை கடைகளுக்கு போய் பாருங்கள். இதன் மூலம் கடந்த மாதங்களில் உங்கள் மாநிலத்தில் உணவு பற்றாக்குறையால் நிகழ்ந்த இறப்பு பிரச்சினையை சரி செய்ய இது உதவும்'' என பதிவிட்டார். சித்தராமையாவின் இந்த விமர்சன பதிவை காங்கிரஸ் தொண்டர்கள் உட்பட 2,300 பேருக்கும் மேற்பட்டோர் ரீடிவிட் செய்தனர்.

இதற்கு பதிலாக யோகி ஆதித்யநாத், சித்தராமையாவின் டிவிட்டர் கணக்கை குறிப்பிட்டு, ''உங்கள் வரவேற்புக்கு நன்றி. உங்கள் ஆட்சி காலத்தில்தான் கர்நாடகாவில் அதிக விவசாயிகள் இறந்ததாக கேள்விப்பட்டேன். நேர்மையான பல அரசு அதிகாரிகளும் உங்கள் ஆட்சியில்தான் இறந்துள்ளனர். பணிமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச முதல்வர் என்கிற வகையில், உங்களது கூட்டணிக் கட்சியினர் (சமாஜ்வாதி) செய்துள்ள தவறுகளையும், கட்டவிழ்த்து விட்ட சட்டம் ஒழுங்கு சீர்குலைவுகளையும் சரி செய்து வருகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார். ஆதித்யநாத்தின் இந்த பதிலை 9 ஆயிரத்துக்கும் அதிகமான பாஜகவினர் ரீடிவிட் செய்துள்ளனர்.

சித்தராமையா, ஆதித்யநாத் ஆகியோரின் வெளிப்படையான கருத்து மோதலை தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ''எது சிறந்த மாநிலம்?'' என்கிற கேள்வி எழுந்துள்ளது. ''யார் சிறந்த முதல்வர், யாருடைய மாநிலம் அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளது? '' என காங்கிரஸ், பாஜக தொண்டர்களிடையே கருத்து மோதல் நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x