புதுடெல்லி: அருணாச்சல பிரதேச மாநிலத்தை ராகுல் காந்தியின் யாத்திரையில் இருந்து நீக்கியது ஏன் என காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் மகேஷ் ஜெத்மலானி கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை(தெற்கு முதல் வடக்கு) பாரத்ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். இரண்டாம் கட்டமாக அருணாச்சல பிரதேசத்திலிருந்து போர்பந்தர் (குஜராத்) வரையாத்திரை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு, ராகுல் காந்தி 2-ம் கட்டமாக பாரத் நியாய் யாத்திரையை (கிழக்கிலிருந்து மேற்கு) ஜனவரி 14-ல் தொடங்குவார் என அறிவிக்கப்பட்டது. மணிப்பூரில் தொடங்கிமும்பையில் முடியும் இதில் அருணாச்சல பிரதேசம் விடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், யாத்திரையில் அருணாச்சல் விடுபட்டது தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான மகேஷ் ஜெத்மலானி ஜெய்ராம் ரமேஷுக்கு பத்து கேள்விகளை எழுப்பி உள்ளார். அவை வருமாறு:
நீங்கள் ஏற்கெனவே அறிவித்த யாத்திரையின் அசல் பாதையை ஏன் மாற்றினீர்கள்?
அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு சொந்தம் கொண்டாடும் சீனா, அதன் 11 இடங்களின் பெயரை மாற்றியது. இதனால்தான் இந்த மாநிலத்தை யாத்திரையின் பாதையிலிருந்து வேண்டுமென்றே விலக்கினீர்களா?
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியபோது நீங்கள் மிகவும் கொந்தளித்தீர்கள். இந்நிலையில் அந்த மாநில மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்பதை உணர்த்தும் வகையில் அங்கிருந்து யாத்திரையைத் தொடங்கி இருக்கவேண்டாமா. அல்லது குறைந்தபட்சம் அம்மாநிலத்தை யாத்திரையில் இடம்பெறச் செய்ய வேண்டியது காங்கிரஸ் கட்சியின் கடமை அல்லவா?
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கிளர்ச்சி ஏற்பட நிதி, ஆயுத உதவியை சீனா செய்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த மணிப்பூர் வன்முறையில் சீனாவின் பங்கு இருக்கலாம் என்று உங்களுக்கு தோன்றியிருக்கிறதா?
கடந்த 2008-ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள காங்கிரஸ் எடுத்த முடிவில் உங்களுக்கு பங்கு இருந்ததா?
அந்த ஒப்பந்தத்தில் என்ன இருந்தது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அருணாச்சல பிரதேசத்தின் மீதானசீன இறையாண்மையை காங்கிரஸ் அங்கீகரிக்கிறது என்ற ஷரத்து உள்ளதா?
கடந்த 1962 முதல் இந்திய நிலப்பரப்பை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன், 2008-ல் மத்தியில் ஆட்சியில் இருந்த கட்சி ஒப்பந்தம் செய்து கொண்டது சட்டப்பூர்வமானது என நம்பு கிறீர்களா?
எது எப்படியிருந்தாலும் நீங்களும் உங்கள் கட்சியும் கடைப்பிடிக்கும் வெளிப்படைத்தன்மை கோட்பாட்டின் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்த வேண்டாமா?
WRITE A COMMENT