Published : 29 Dec 2023 07:29 PM
Last Updated : 29 Dec 2023 07:29 PM
புதுடெல்லி: அசாமில் செயல்பட்டு வந்த உல்ஃபா அமைப்புடன் மத்திய அரசும், அசாம் மாநில அரசும் அமைதி உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளன.
தனி இறையாண்மை கொண்ட பகுதியாக அஸ்ஸாமை அறிவிக்க வேண்டும், அசாமின் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும், அசாம் மக்களுக்கான நில உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உல்ஃபா அமைப்பு ஆயுதம் ஏந்தி போராடி வந்தது. 1980-களில் இந்த அமைப்பின் தீவிரமான செயல்பாடு காரணமாக பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள், உல்ஃபா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
உல்ஃபா அமைப்பின் செயல்பாடு காரணமாக சிறப்பு பாதுகாப்புப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டு, உல்ஃபா அமைப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு இருந்தது.
இந்நிலையில், மத்திய அரசும், அசாம் மாநில அரசும் உல்ஃபா அமைப்பினருடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தின. உல்ஃபாவின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டதை அடுத்து, அமைதி உடன்படிக்கை டெல்லியில் இன்று கையெழுத்தானது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, உல்ஃபா அமைப்பின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
இந்த உடன்படிக்கை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த ஹிமந்த பிஸ்வா சர்மா, "இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். 8,700 போராளிகளைக் கொண்ட தீவிரவாத அமைப்பு அமைதி உடன்படிக்கையில் இன்று இணைந்துள்ளது. இதற்காக மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன்மூலம், பழங்குடி போராளிகளின் செயல்பாடு முடிவுக்கு வந்துள்ளது. அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு நாட்டின் வளர்ச்சியில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள்.
1980களில் சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்கள் எதர்க்காகக் கொல்லப்பட்டார்கள் என்ற கேள்வியை அவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள். அந்த கேள்விக்கு விடை காணும் விதமாக இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான முன்னெடுப்பை தீவிரப்படுத்தி சாத்தியப்படுத்தியதில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பிரதமர் நரேந்திர மோடி மீதான நம்பிக்கை காரணமாக உல்ஃபா அமைப்பு இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது" என தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கை குறித்துப் பேசிய அமித் ஷா, "அசாமின் எதிர்காலத்துக்கு இது ஒரு பொன்னாள். அசாமிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் நிலவி வந்த வன்முறை இதன்மூலம் முடிவுக்கு வந்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 9 அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சரணடைந்துள்ளனர். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான வாக்குறுதிகள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குறுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்படும். இதற்காக குழு ஒன்று ஏற்படுத்தப்படும்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT