Last Updated : 27 Jan, 2018 12:56 PM

 

Published : 27 Jan 2018 12:56 PM
Last Updated : 27 Jan 2018 12:56 PM

பிரதமரின் ஆலோசனையை ஏற்று மாற்றுத்திறனாளிகளுக்கு பெயர் மாற்றம்:ரயில்வே அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் ரயிலில் சலுகைக் கட்டணத்தில் பயணிக்க வழங்கப்படும் சான்றிதழில் புனிதமான உடல் (திவ்யாங்) கொண்டவர்கள் என மாற்றி ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 3 மாதம் பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழில் இன்னும் விகாலங் ( உடல் குறையுள்ளவர்கள்) என்று குறிப்பிடப்பட்டு வருகிறது. அது இனி மாற்றப்பட்டு திவ்யாங் (புனிதமான உடல்) என்று அழைக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.

இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :

பிரதமர் மோடியின் ஆலோசனையை பின்பற்றி, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பார்வையற்றவர்கள் இனி பார்வை சவால் உடையவர்கள், காது மற்றும் வாய் பேச இயலாதவர்கள், இனி கேட்கும், பேசும் திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள், உடல் ஊனமுற்றோர்களை, மாற்றுத்திறனாளிகள் (திவ்யாங் ஜன்) என்று அழைக்கப்படுவார்கள்.

இதன்படி, அவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழிலும் மாற்றம் செய்யப்படும். இந்த உத்தரவு வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “ விகாலங் எனும் வார்த்தை மாற்றுத்திறனாளிகளை மரியாதை குறைவாக கருதுகிறது என்று பிரதமர் மோடி ஆலோசனை தெரிவித்ததையடுத்து, அவர் கூறியபடி மாற்றப்பட்டு திவ்யாங் என மாற்றப்பட்டுவிட்டது. இனி ரயில்வே துறை மாற்றுத்திறனாளிகளுக்கான மானியச் சான்றிதழில் இந்த புதிய பெயர் இடம் பெறும்” எனத் தெரிவித்தார்.

பார்வை சவால் மாற்றுத்திறனாளிகளுக்கு ரயிலில் ஏ.சி. முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு படுக்கை வசதியில் 50 சதவீதம் கட்டணச் சலுகையும், செவித்திறன், பேசும் திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீதம் கட்டணச் சலுகையும் அளிக்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு, ஏசி முதல்வகுப்பு படுக்கை வசதி, 2அடுக்கு படுக்கை வசதி, சேர் கார், ஆகியவற்றில் 50 சதவீதமும், 2-ம் வகுப்பு படுக்கை வசதியில் 75சதவீதமும் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x