Published : 05 Jan 2018 10:24 AM
Last Updated : 05 Jan 2018 10:24 AM

கேரள முன்னாள் அமைச்சருக்கு எதிராக நில அபகரிப்பு வழக்கு: கோட்டயம் நீதிமன்றம் உத்தரவு

கேரளாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் தாமஸ் சாண்டிக்கு எதிராக நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்ய கோட்டயம் விஜிலென்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் தாமஸ் சாண்டி. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், ஆலப்புழையில் உள்ள ‘லேக் பேலஸ் ரிசார்ட்’ என்ற தங்கும் விடுதியின் உரிமையாளர் ஆவார்.

இந்நிலையில் தாமஸ் சாண்டி சட்டவிரோதமாக விவசாய நிலத்தை சமன்படுத்தி, அந்த விடுதிக்கு அரசுப் பணத்தில் சாலை அமைத்துள்ளதாகவும் அரசு நிலத்தை அபகரித்து வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தியுள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆலப்புழை மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து அறிக்கை அளித்தார். அதை ரத்துசெய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார் தாமஸ் சாண்டி. இதில் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானதை தொடர்ந்து கடந்த நவம்பரில் பதவி விலகினார்.

தாமஸ் சாண்டி மீதான புகார் குறித்து ஊழல் கண்காணிப்புத் துறையின் துரித சரிபார்ப்பு அறிக்கை கோட்டயம் விஜிலென்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தாமஸ் சாண்டிக்கு எதிராக நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் வரும் 18-ம் தேதி முதல்கட்ட அறிக்கை அளிக்கவும் ஊழல் கண்காணிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், மீண்டும் அமைச்சராகலாம் என்ற தாமஸ் சாண்டியின் நம்பிக்கை தகர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x