Published : 26 Dec 2023 01:46 PM
Last Updated : 26 Dec 2023 01:46 PM

கரும்பூஞ்சை நோயால் ஏற்படும் பாதிப்புக்கு குறைந்த செலவில் முக உள்வைப்புகள்: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள், கோவிட் நோயாளிகள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளிகள், எச்ஐவி/எய்ட்ஸ் மற்றும் கரும்பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்காக முப்பரிமாண அச்சிடுதலுடன் முகஉள்வைப்புகளை உருவாக்கியுள்ளனர்.

உலோக முப்பரிமாண அச்சிடுதல் அல்லது சேர்க்கை உற்பத்தியை (additive manufacturing) அடிப்படையாகக் கொண்ட இந்த முயற்சியைச் செயல்படுத்த சென்னையில் பல் அறுவை சிகிச்சை நிபுணர்களால் உருவாக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜோரியாக்ஸ் இன்னோவேஷன் லேப்ஸ் உடன் இக்கல்வி நிறுவனம் கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளது.

மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கரும்பூஞ்சை நோய்த்தொற்று இந்தியாவில் பெரும் கவலைக்குரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. முக அம்சங்களை இழந்துவிடுவது இந்த நோய்த்தொற்றால் ஏற்படும் மிகப் பெரிய பாதிப்பாகும். நோயாளிக்கு மன மற்றும் உணர்வு ரீதியாக இது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே, கரும்பூஞ்சை நோய்த்தொற்றல் இழந்த முகங்களைப் புனரமைப்பது அவசிய அவசரத் தேவையாகும். கோவிட் நோய்த்தொற்றுக்குப் பின் இந்தியாவில் 60,000 பேருக்கு கரும்பூஞ்சை நோய் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரும்பூஞ்சை நோய்த்தொற்றுக்குக் காரணமான பூஞ்சை, முகத்தின் திசுக்களை ஆக்கிரமித்து நெக்ரோசிஸ் மற்றும் சிதைவை ஏற்படுத்தும். சில நேரங்களில் நோயாளிகள் தங்கள் மூக்கு, கண்கள் மட்டுமின்றி முகம் முழுவதையுமே கூட இழக்க நேரிடலாம். இதுதவிர நோயாளிகள் சுவாசிக்கவோ, உண்ணவோ, பேசவோ முடியாத அளவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் அன்றாட செயல்பாடுகளே மிக மோசமடையும் சூழல் ஏற்படுகிறது.

கரும்பூஞ்சை நோயால் முகபாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை சாத்தியமானதொரு தீர்வாகும். மூக்கு, கண்கள் மற்றும் பிற முக அமைப்புகளை தோலால் ஒட்டுதல், திசு விரிவாக்கம், மைக்ரோ வாஸ்குலர் அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு நுட்பங்களை இந்த நடைமுறை உள்ளடக்கியதாகும். நோயாளியின் தோற்றத்தையும் செயல்பாட்டையும் மீட்டெடுக்க இந்த நடைமுறைகள் உதவுகின்றன. அதுமட்டுமின்றி அவர்களின் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ளவும் முடியும். இருப்பினும் நோயாளிக்கான பிரத்யேக உள்வைப்புகள் மற்றும் அதற்கான செயல்முறைகளுக்கு அதிகளவில் பணம் செலவிட வேண்டியிருக்கும். ஏழைஎளிய மக்களுக்கு அவ்வளவு செலவு செய்வது இயலாத காரியமாகும்.

ஐஐடி மெட்ராஸ் உருவாக்கியுள்ள இத்தொழில்நுட்பம் குறித்து விவரித்த சென்னை ஐஐடி உலோகவியல் மற்றும் பொருட்கள் துறை (Metallurgical and Materials) துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் முருகையன் அமிர்தலிங்கம், "சேர்க்கை உற்பத்தி (3டி பிரிண்டிங்) என்பது சாத்தியமான செலவு குறைந்த நிகர வடிவ செயல்முறைத் தயாரிப்பாக ஏற்கனவே உருவெடுத்துள்ளது. தனிப்பயனாக்கப்பட்ட குறிப்பிட்ட வடிவமைப்புகளுடன் சிக்கலான உடல் உள்வைப்புக்காக குறைந்த அளவில் உற்பத்திசெய்ய துருப்பிடிக்காத எஃகு, Ti-6Al-4V, Co-Cr-Mo ஆகிய உலோகக் கலவைகளைக் கொண்டு குறிப்பிட்ட உள்வைப்புகளை அச்சிடும் வகையில் இத்தொழில்நுட்பத்தை வணிகமயமாக்க ஐஐடி மெட்ராஸ்-ல் ஏற்கனவே விரிவான ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நோயாளியின் எம்ஆர்ஐ/சிடி தரவுகளைப் பயன்படுத்தி தனித்தன்மையுடன் கூடிய விவரங்களை அச்சிடத்தக்க CAD வடிவத்திற்கு மாற்றப்படுகிறது. சென்னை ஐஐடி-ல் உள்ள 'லேசர் பவுடர் பெட் வசதி'யைப் பயன்படுத்தி மருத்துவத் தரம்வாய்ந்த டைட்டானியத்தில் இருந்து முகவைப்புகள் அச்சிடப்படுகின்றன. #Right2Face-ன் இந்த முன்முயற்சியின் வாயிலாக கரும்பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழைஎளிய நோயாளிகளுக்கு முகச்சீரமைப்பு அறுவை கிசிச்சை நிபுணர்களின் ஒத்துழைப்போடு தனிப்பயனாக்கத்துடன் கூடிய உள்வைப்புகளை உருவாக்க முடியும்" என்றார்.

இந்த முன்முயற்சி குறித்துப் பேசிய ஜோரியாக்ஸ் இன்னோவேஷன் லேப்ஸ் தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் கார்த்திக் பாலாஜி, "கோவிட்டுக்குப் பின் கரும்பூஞ்சை நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முகத்தில் உள்ள எலும்புகளை அகற்ற வேண்டிய சூழல் இருந்தது. இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் குடும்பத்திற்காக அன்றாட உழைப்பை நம்பியிருக்கும் நிலையில் நான்கு சுவர்களுக்கு மத்தியில் அகப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். #Right2face வாயிலாக முகச்சீரமைப்பு அறுவைச் சிகிச்சை நிபுணர்களுடன் இணைந்து தேவையுள்ள நோயாளிகளுக்கு முகத்தை மீட்டெடுக்கவும் அவர்களின் வாழ்வில் மீண்டும் புன்னகையை ஏற்படுத்தவும் இலக்காகக் கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

நோயாளிகளின் முகத்துக்கு பொருத்தமான உள்வைப்பை ஐஐடி மெட்ராஸ் குழுவினரால் சரியாக அச்சிடமுடியும் என்பது இந்த முன்முயற்சியின் தனிச்சிறப்பாகும். நோயாளிகளின் சிடி தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பெற்று அதில் இருந்து நோயாளிகளுக்கு மிகப் பொருத்தமான பிரத்யேக உள்வைப்வை வடிவமைக்கிறார்கள். குறிப்பாக, சென்னை ஐஐடி-தான் முதன்முறையாக கரும்பூஞ்சை நோயாளிகளுக்கென பிரத்யேக முகவைப்பை அச்சிடுகிறது.

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் விலை உயர்ந்த இறக்குமதி செய்யப்பட்ட உள்வைப்புகளை வாங்க முடியாத நோயாளிகளைக் கண்டறிந்து, #Right2Face இயக்கம் மூலம் இந்த உள்வைப்புகளை இலவசமாக வழங்குகிறார்கள். சென்னை ஐஐடி உடன் கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ள ஜோரியோக்ஸ் இன்னோவேஷன்ஸ் லேப்ஸ், ஐஐடி மெட்ராஸ் வடிவமைப்பு மற்றும் 3டி பிரிண்டிங்கைக் கையாளும் அதே வேளையில், அறுவை சிகிச்சை நடைமுறைகளின் ஒரு பகுதியிலும் பங்கெடுத்துக் கொள்கிறது. பொதுவாக புனரமைப்பு நடைமுறைகளுக்குப் பயன்படுத்தப்படும் டைட்டானியத்தால் மருத்துவ தரத்துடன் உள்வைப்புகள் செய்யப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x