Published : 20 Dec 2023 12:30 PM
Last Updated : 20 Dec 2023 12:30 PM

“எம்.பி.,க்கள் இடைநீக்க உத்தரவை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்” - மல்லிகார்ஜுன கார்கே

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள்

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இடைநீக்கம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும் என கூறினார்.

கடந்த 13 ஆம் தேதி மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர், திடீரென கீழே குதித்து புகை குண்டுகளை வீசி அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். இந்த விவகாரத்தைக் கண்டித்தும், இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்து அறிக்கை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியில் ஈடுபட்டது மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு சபாநாயகர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரின் இருக்கைகளை முற்றுகையிட்டது ஆகிய காரணங்களுக்காக மொத்தம் 141 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இத்தனை பேர் இடைநீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல்முறை.

141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, இன்றும் காந்தி சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்பட ஏராளமான எம்.பிக்கள் கலந்து கொண்டு, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “அவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் இடைநீக்கம் செய்துவிட்டு, சர்வாதிகார ஆட்சியை நடத்த விரும்புகிறார்கள். ஜனநாயகத்தில் இத நடக்காது. எனவேதான் நாம் மக்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். இடைநீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும். நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இது தொடர்பாக நான் மாநிலங்களவைத் தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளேன். அதற்கான பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்” எனக் கூறினார்.

முன்னாக, மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், “நாடாளுமன்றத்துக்குள் ஊடுருவிய இருவருக்கு பாஸ் கொடுத்த பாஜக எம்.பி-யிடம் இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அவர் சுதந்திரமாக இருக்கிறார். இது என்ன வகையான விசாரணை? நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பான உயர் அதிகாரிகள் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

நாடாளுமன்றத்துக்குள் ஊடுருவியவர்கள் பல மாதங்களாக திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். இது மிகப் பெரிய உளவுத்துறை தோல்வி. இதற்கு யார் காரணம்? ஊடுருவல்காரர்கள் மஞ்சள் நிற வாயு குப்பிகளை மறைத்து உள்ளே வந்தது எப்படி? பிரதமரும் அவரது கட்சியும் நாட்டில் ஒற்றை கட்சி ஆட்சியை ஏற்படுத்த விரும்புகிறார்கள். இது ஜனநாயகத்தை தகர்ப்பதற்கு ஒப்பானது. எதிர்க்கட்சி எம்.பிக்களை இடைநீக்கம் செய்ததன் மூலம் துல்லியமாக தங்கள் திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர்” என்று பதிவிட்டிருந்தார்.

நாடாளுமன்ற பாதுகாப்புக் குறைபாட்டுக்குக் காரணமாக இருந்த உயர் பதவியில் இருப்பவர்களை தண்டிக்காமல், எம்.பிக்களின் ஜனநாயக உரிமையை பறித்திருப்பது வெட்கக்கேடானது. இதன்மூலம், அவர்கள் தங்கள் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள் என கண்டித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x