Last Updated : 05 Jan, 2018 08:49 PM

 

Published : 05 Jan 2018 08:49 PM
Last Updated : 05 Jan 2018 08:49 PM

கேந்திரிய வித்யாலயா பணிக்கு இந்தி கட்டாயம் என்பதை நீக்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல்

கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்புத் தேர்வில் இந்தி கட்டாயம் என்பதை நீக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி உள்ளது. அக்கட்சியின் எம்.பி.யான டி.ரத்தினவேலு இன்று மாநிலங்களவையில் அதை வலியுறுத்தினார்.

இது குறித்து இன்று மாநிலங்களவையில் ரத்தினவேலு பேசியதாவது:

''இந்தியாவில் மொத்தம் 1125 கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 41 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. மொத்தம் 12 லட்சம் மாணவ-மாணவியர் கல்வி கற்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 15,800 ஆசிரியர்கள் பணியமர்த்திட மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து நிரப்பப்படுகிறது. தமிழகத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான படித்த தகுதி வாய்ந்தோர் இப்பணியிடங்களுக்கு போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டிலிருந்தும் ஆயிரக்கணக்கான படித்த தகுதி வாய்ந்தவர்கள் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து போட்டியிட்டனர்.

தமிழகப் பள்ளிகளில் இந்தி இல்லை

ஆனால் 1986-ம் ஆண்டிற்குப் பிறகு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்தி அறிந்திருப்பது கட்டாயமாக்கி கேந்திர வித்யாலயா நிர்வாகம் ஆணையிட்டது துரதிர்ஷ்டமாகும். தமிழ்நாட்டில் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவது இல்லை என்பதாலும், இந்தி தெரியாத ஒரே காரணத்தாலும் நன்கு படித்த தமிழர்கள் இந்த தேர்வுகளில் பங்கேற்க முடியாமல் போகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த விதிமுறை நடந்து வருகிறது. இது போதாது என்று தற்போது ஆசிரியர் தேர்வில் இந்தி தேர்வும் ஒரு அங்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் இருக்கும் இந்தி அறியாத, நன்கு படித்த தகுதி வாய்ந்தவர்களை முற்றிலுமாகப் புறக்கணிக்கும் செயலாகும். இது நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பானதாகும்.

அனைவரும் விண்ணப்பிக்கும் நிலை

இந்திப் பாடம் கட்டாயம் என்ற விதிமுறை காரணமாக ஆண்டுதோறும் தமிழ்நாட்டிலுள்ள நன்கு தகுதி வாய்ந்த படித்த இளையோர் ஆயிரக்கணக்கானோர் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பிக்க இயலாத நிலை உள்ளது. எனவே கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இந்தியைக் கட்டாயமாக்கி உள்ளதை நீக்கி, இந்தி மொழி ஆசிரியர் பணி தவிர்த்து அனைத்துப் பாடங்களுக்கும் ஆசிரியராக தகுதி வாய்ந்த அனைவரும் விண்ணப்பித்து, தேர்வு எழுதலாம் என்ற நிலையை மீண்டும் உருவாக்கிட மத்திய அரசிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.''

இவ்வாறு ரத்தினவேலு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x