Published : 13 Dec 2023 01:55 PM
Last Updated : 13 Dec 2023 01:55 PM

‘ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஓர் ஆம்புலன்ஸ் என்பதே இலக்கு’ - கனிமொழி சோமு எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

திமுக. எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு | கோப்புப்படம்

புதுடெல்லி: "ஐந்து லட்சம் மக்கள் தொகைக்கு குறைந்தது ஒரு நவீன உயிர்காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும்; ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு குறைந்தபட்ச உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஓர் ஆம்புலன்ஸாவது இருக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது" என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பர்வீன் பவார் பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிச.4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு, “குறைந்தபட்ச மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் இயங்கும் ஆம்புலன்ஸ்களால் உயிரிழப்புகள் அதிகமாகிறதா? இதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பர்வீன் பவார் அளித்த பதில்: “மருத்துவ உட்கட்டமைப்பு, அவசர கால மருத்துவத் தேவைகளை உறுதிப்படுத்துவது, ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்துவது போன்றவை மாநில அரசுகளின் நேரடி நிர்வாகத்தில் வருகின்றன. ஆனால் இந்த விஷயங்களை செயல்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குகிறது. மாநில அரசின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.

ஆம்புலன்ஸ்களைப் பொருத்தவரை, அவற்றை கட்டுப்படுத்தும் கால் செண்டர்கள், ஜிபிஎஸ் கருவி, குறைந்தபட்ச மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கான நடைமுறைச் செலவுகளை மாவட்ட அளவிலான தொழில்நுட்ப வல்லுனர் கண்காணித்து சான்றிதழ் வழங்குகிறார். அதற்கேற்ப நிபந்தனைகளின் அடிப்படையில் மத்திய அரசு அதற்கான நிதி உதவியை வழங்குகிறது.அவசர அழைப்பு வந்தவுடன் எவ்வளவு விரைவாக அந்த ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட இடத்தை அடைகிறது? ஒரு நாளைக்கு எத்தனை முறை அது பயன்படுகிறது? இதரப் பயன்பாடுகள் போன்றவற்றை கணக்கிட்டே ஒரு ஆம்புலன்ஸின் செயல்பாட்டுத்திறன் முடிவு செய்யப்படுகிறது.

ஆம்புலன்ஸ்களின் செயல்பாடுகளை, தரத்தை உயர்த்தும் வகையில் தேசிய சுகாரத் திட்டத்தின்கீழ் தேசிய ஆம்புலன்ஸ் சேவைகள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புதான் குறைந்தபட்ச உயிர்காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள், உயிர்காக்கும் நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள், நோயாளிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றை வாங்க உதவி செய்கிறது.

ஐந்து லட்சம் மக்கள் தொகைக்கு குறைந்தது ஒரு நவீன உயிர்காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும்; ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு குறைந்தபட்ச உயிர்காக்கும் கருவிகள் கொண்ட ஒரு ஆம்புலன்ஸாவது இருக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. குறைந்தபட்சம் இந்த இலக்கை அடைய இன்னும் எத்தனை ஆம்புலன்ஸ்கள் தேவை என்பதை அறிந்து மாநில அரசுகள் அவற்றை வாங்கிக்கொள்ளலாம்.

இன்றைய தேதியில் நாடு முழுக்க 2,957 உயிர்காக்கும் நவீன கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள், 14,603 குறைந்தபட்ச உயிர்காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள், 4,259 நோயாளிகளின் பயணத்துக்கான வாகனங்கள், 17 படகுகள், 81 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கு தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவை தவிர, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஓர் ஆம்புலன்ஸில் என்னவெல்லாம் வசதிகள் இருக்க வேண்டும், அதன் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கி தேசிய ஆம்புலன்ஸ் விதிகள் ஒன்றை உருவாக்கி வெளியிட்டிருக்கிறது. அரசுத் துறைகள், என்.ஜி.ஓ.க்கள் இந்த விதிமுறைகள்படி ஆம்புலன்ஸ்களை இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x