Published : 13 Dec 2023 06:29 AM
Last Updated : 13 Dec 2023 06:29 AM

என் மீது தாக்குதல் நடத்த முதல்வர் பினராயி விஜயன் சதி: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: என் மீது தாக்குதல் நடத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் சதி செய்கிறார் என அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டி உள்ளார்.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் நேற்று முன்தினம் டெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டுள்ளார். அப்போது, வழியில் ஆங்காங்கே கூடியிருந்த ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் (எஸ்எப்ஐ) கருப்புக் கொடி காட்டி உள்ளனர். அத்துடன் கார் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒரு இடத்தில் ஆளுநர் பயணித்த காரை இடைமறித்துள்ளனர்.

இதுகுறித்து ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியதாவது:

நான் காரில் சென்று கொண்டி ருந்தபோது, போராட்டக்காரர்கள் கருப்புக் கொடி காட்டியதுடன் கார் மீது தாக்குதல் நடத்தினர். எனது காரை இடைமறித்தபோது நான் காரிலிருந்து இறங்கினேன். அப்போது போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஓடினர். பின்னர் போலீஸார் அவர்களை அங்கு நின்றிருந்த காருக்குள் தள்ளி விட்டனர். அவர்கள் காரில் ஏறி தப்பிச் சென்றனர். இதை போலீஸார் வேடிக்கை பார்த்தனர்.

முதல்வர் காரில் சென்றால் இதுபோன்ற சம்பவம் நிகழுமா? அவருடைய காரின் அருகே போராட்டக்காரர்களை போலீஸார் அனுமதிப்பார்களா? எனவே, இது ஏதேச்சையாக நடந்த நிகழ்வு அல்ல. திட்டமிட்டு வேண்டுமென்றே என் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். முதல்வரின் உத்தரவுப்படி அவர்கள் செயல்பட்டுள்ளனர். என் மீது தாக்குதல் நடத்த முதல்வர் சதித் திட்டம் தீட்டி உள்ளார்.

கேரளாவில் ஜனநாயகம் மோசமடைந்து வருகிறது. அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக ஒருவர் மீது தாக்குதல் நடத்துவது சரியல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

7 பேர் கைது: இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக எஸ்எப்ஐ அமைப்பைச் சேர்ந்த 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x