Published : 11 Dec 2023 07:20 AM
Last Updated : 11 Dec 2023 07:20 AM

எம்பியிடம் ரூ.318 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் | ஊழலுக்கு உத்தரவாதம் அளிக்கும் காங்கிரஸ்: நட்டா விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் அளிக்கிறார் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியை சேர்ந்தவர் தீரஜ் குமார்சாகு. காங்கிரஸ் சார்பில் 3 முறைமாநிலங்களவை எம்.பி.யானார்.இந்நிலையில், ஒடிசாவின் பொலாங்கிர் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பால்டியோ சாகு சன்ஸ் அண்ட் குரூப் நிறுவனத்தின் பங்குதாரராக தீரஜ் குமார் சாகு உள்ளார். இதன் கிளைகள் ஜார்க்கண்ட், மேற்குவங்கத்தில் செயல்படுகின்றன. பவுத் டிஸ்டிலெரி சார்பில் ஒடிசாவில் மட்டும் 250 மதுக்கடைகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய மதுபான ஆலைகளில் இதுவும் ஒன்று.

கடந்த 6-ம் தேதி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள தீரஜ் குமார் சாகு எம்பியின் வீடு மற்றும் அவரது சொந்தமான அலுவலகங்கள் என 43 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில் இதுவரை ரூ.318 கோடிக்கும் அதிகமான ரொக்க பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. மேலும் ரூ.150 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நீங்களும் (தீரஜ் குமார் சாகுவும்), உங்களது தலைவர் ராகுலும்கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். இது புதிய இந்தியா. இங்கு அரச குடும்பம் என்ற பெயரில் மக்களை சுரண்ட முடியாது. ஓடி, ஓடி நீங்கள் ஓய்ந்துவிடுவீர்கள். ஆனால் சட்டம் தனது கடமையை செய்யும். ஊழலுக்கு காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கிறது. அதேநேரம் பிரதமர் மோடி ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் அளிக்கிறார். மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் முழுமையாக திரும்ப பெறப்படும்.

இவ்வாறு நட்டா தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் அமித்மாளவியா, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மக்களவைத் தேர்தலில் இருமுறை தீரஜ் பிரசாத் சாகு தோல்வி அடைந்தார். அவரை காங்கிரஸ் கட்சி 3 முறை மாநிலங்களவை எம்பியாக்கி உள்ளது. சுதந்தர போராட்ட காலம் முதல் தங்களது குடும்பம் காங்கிரஸில் இருப்பதாக சாகு கூறியுள்ளார். ஆனால் தற்போது அவரிடம் இருந்து காங்கிரஸ் விலகி நிற்கிறது. அவர் எந்த காந்தியின் (சோனியா காந்தி குடும்பம்) ஏடிஎம் மையமாக செயல்பட்டார் என்ற உண்மையை காங்கிரஸ் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அமித் மாளவியா கூறியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.பாஜ்பாய் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறையை சிலர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த நேரத்தில் சாகுவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் (ரூ.318 கோடி) யாருடையது என்பது குறித்து ராகுல் பதில் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x