Published : 09 Dec 2023 03:08 PM
Last Updated : 09 Dec 2023 03:08 PM

“பாஜகவுக்குள் ஒழுங்கு இல்லை” - புதிய முதல்வர்கள் தேர்வில் தாமதத்தை சாடிய அசோக் கெலாட்

அசோக் கெலாட் | கோப்புப்படம்

புதுடெல்லி: சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரமாகியும் பாஜக வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களின் புதிய முதல்வர்கள் அறிவிக்கப்படாதது குறித்து அக்கட்சியை அசோக் கெலாட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்வதற்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராஜஸ்தான் காபந்து முதல்வர் அசோக் கெலாட் சனிக்கிழமை டெல்லி வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், "தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 7 நாட்கள் ஆகிறது. அவர்களால் (பாஜக) இன்னும் மூன்று மாநிலங்களுக்கான முதல்வர்கள் யார் என்பதை அறிவிக்க முடியவில்லை. அந்தக் கட்சிக்குள் ஒழுக்கம் இல்லை. இதே விஷயத்தை காங்கிரஸ் கட்சி செய்திருந்தால் என்னென்ன குற்றச்சாட்டுகளை எல்லாம் கூறி மக்களைத் தவறாக வழிநடத்தியிருப்பார்கள்.

கோகமேடி கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆட்சேபம் இல்லை என்ற ஆவணத்தில் நான் கையெழுத்திட வேண்டி இருந்தது. அதில் புதிய முதல்வர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு மேலாக இன்னும் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கவில்லை. அவர்கள் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்.

மேலும், தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த கெலாட், "பாஜகவினர் மதப் பிரச்சினைகளை எழுப்பி மக்களை பிரித்தார்கள், முத்தலாக், அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்து, கன்னையா லால் கொலை போன்றவற்றுடன் முஸ்லிம்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது, இந்துக்களுக்கு ரூ.5 ஐந்து லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது என்று பொய்யாக பிரச்சாரம் செய்தார்கள். எப்படி இருந்தாலும் புதிய அரசுக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிப்போம்" என்றார்.

முன்னதாக சத்தீஸ்கர், மத்தியப் பிரதேச மாநில தேர்தல் தோல்வி குறித்த மதிப்பாய்வு கூட்டம் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நடந்தது. அப்போது சமீபத்திய மாநிலத் தேர்தல்களில் கட்சியின் மோசமான செயல்பாடுகள் குறித்து மாநிலத் தலைமைகளிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் நான்கு மாநிலங்களில், அதிலும் குறிப்பாக மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழந்திருப்பதன் மூலம் இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னடைவு வரும் 2024 மக்களவைத் தேர்தலைச் சந்திக்கும் கட்சியின் நம்பிக்கையை வெகுவாக பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x